”ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மெளனம் கண்டிக்கத்தக்கது”: தங்க தமிழ்ச்செல்வன் | Thanga Tamil Selvan comments over EPS and OPS

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (18/11/2017)

கடைசி தொடர்பு:10:01 (18/11/2017)

”ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மெளனம் கண்டிக்கத்தக்கது”: தங்க தமிழ்ச்செல்வன்

"போயஸ் இல்லத்தில் நடைபெற்ற சோதனைகுறித்து ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மெளனம்காப்பது கண்டிக்கத்தக்கது” என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தங்கத் தமிழ்ச்செல்வன்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை இரவு நான்கு மணி நேரமாக சோதனை நடத்தியது. சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைக்காக, நீதிமன்றத்தின் உத்தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளதாக அறிவித்தனர். போயஸ் கார்டன் இல்லத்தின் முக்கியக் கட்டடத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும், அதன் அருகில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் மட்டுமே சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இச்சோதனைகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல். தமிழக போலீஸாரின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது என்றால் இது அரசின் ஒத்துழைப்பின்றி நடந்திருக்குமா. இந்தச் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது மெளனம் கண்டிக்கத்தக்கதாக உள்ளது” என்றார்.