கழுத்தளவு நீரில் சடலத்தை சுமந்துசெல்லும் அவலம்: தவிக்கும் காமராஜர்நல்லூர் | the worst condition of a village near tuticorin

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (18/11/2017)

கடைசி தொடர்பு:10:20 (18/11/2017)

கழுத்தளவு நீரில் சடலத்தை சுமந்துசெல்லும் அவலம்: தவிக்கும் காமராஜர்நல்லூர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள காமராஜர்நல்லூர் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல வாய்க்காலில் பாலம்  அமைத்து தராததால் கழுத்தளவு தண்ணீரில் சடலத்தைத் தூக்கிச் செல்கின்றனர் ஊர்மக்கள். கடந்த 40 ஆண்டுகளாக தொடர்கிறது இந்த அவலம்.

பாதை இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் சடலம் தூக்கிச் செல்லும் அவலம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்டது காமராஜர்நல்லூர். இக் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1975-ம் ஆண்டு இக் கிராம மக்களுக்கு அரசு காலனி வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இக் கிராம மக்களின் அருகிலுள்ள மணலூர் கிராமத்தில் சுடுகாட்டுப் பயன்பாட்டிற்காக நிலம் ஒதுக்கபட்டுள்ளது. நேர்வழிப்பாதை அமைத்து தரவில்லை என்பதால் 3 கி.மீ தூரம் வரை சுற்றுப் பாதையில்தான் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டியதுள்ளது. தற்போது பெய்துள்ள மழையால் பாசனத்திற்காக பெருங்குளம் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு இக் கிராமத்திலுள்ள வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. இச்சூழலில் இறந்தவரின் சடலத்தை கழுத்தளவு ஓடும் தண்ணீரில் தூக்கிச் சென்று உடலை அடக்கம் செய்து வருகிறார்கள் ஊர்மக்கள்.

பாதை இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் செல்கின்றனர்

இதுகுறித்து இக் கிராமத்தைச் சேர்ந்த பால்வன வளவனிடம் பேசினோம், ‘’ எங்க கிராமத்துல 130 வீடுகள் இருக்குது. சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்த அரசாங்கம், அந்தச் சுடுகாட்டிற்கு இறந்தவர்கள் உடலைத் தூக்கிட்டுப் போறதுக்கு பாதை அமைச்சுத் தரலை. 1.கி.மீ தூரத்துல இருக்குற சுடுகாட்டுக்குப் போவதற்கு , 3 .கி.மீ தூரம் வரை சுத்துப் பாதையிலதான் போக வேண்டியதாயிருக்கு. இடையில ஓடுற வாய்க்காலில் இப்போ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது. இனி தை மாசம் வரைக்கும் தொடர்ந்து மழைதான் பெய்யும். இப்போ பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கு. தண்ணீர் ஓடுற வேகத்துல நடந்து போக முடியலை. இழுத்துக்கிட்டு போகுது.

இதுல இறந்தவர் உடலைத் தூக்கிக்கிட்டு எப்படிப் போகுறது. உடலை அடக்கம் பண்ணினதோட முடியாது. அடுத்தநாள் பால் ஊத்துறது, காரியம் என ரெண்டு மூணு தடவை சுடுகாட்டுக்குப் போகணும். 40 வருசமா எங்களுக்கு இதே நிலைமைதான். மழைக்காலத்துல யாரும் எங்க ஊருல இறந்துடக் கூடாதுன்னு சாமிய வேண்டிக்கிட்டு இருக்கோம். தாசில்தார், கலெக்டர்னு இதுவரைக்கும் மனுவுக்கு மேல மனுவக் கொடுத்துதான் மிச்சம். எந்த நடவடிக்கையும் இல்ல.’’ என்றார் வேதனையுடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close