”எடப்பாடியின் துரோக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?”: டி.டி.வி. தினகரன்

”எடப்பாடியின் துரோக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?” என போயஸ் இல்ல சோதனைகுறித்து தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில், வருமான வரித்துறை இரவு நான்கு மணி நேரமாக சோதனை நடத்தியது. சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைக்காக, நீதிமன்றத்தின் உத்தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளதாக அறிவித்தனர். போயஸ் கார்டன் இல்லத்தின் முக்கிய கட்டடத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும், அதன் அருகில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் மட்டுமே சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், “தங்களின் ஆட்சியை, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகுவைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களைச் செய்யக் காத்திருக்கிறார்கள்..? போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று சொல்லி, தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றிவரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோகச் செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!