“எங்க ஊர் ஏரி 10 வருசமா நிரம்பலை..!” அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் ஆய்வு | Water management research by government school students

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (18/11/2017)

கடைசி தொடர்பு:15:43 (17/08/2018)

“எங்க ஊர் ஏரி 10 வருசமா நிரம்பலை..!” அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் ஆய்வு


       அரசுப் பள்ளி மாணவர்கள்

" 'படிப்பு என்பது வெறும் பாடப் புத்தங்களில் குதித்து உழல்வது மட்டுமல்ல. சுற்றுப்புறங்களைக் கவனித்தல், சுற்றுப்புறத்தை செம்மையாகக் கையாண்டு, மக்களுக்குப் பயன்தரும் வகையில் மாற்றுவதும்தான் 'ன்னு எங்க அறிவியல் ஆசிரியர் அடிக்கடி சொல்வார். 'அதுதான் உண்மையான கல்வி. பாடப்புத்தகம்,தேர்வு இதெல்லாம் தாண்டி இந்தக் கல்வியை விடாமல் காலம் முழுக்க படிங்க'ன்னு கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்புல அவர் எங்களுக்குச் சொல்வார். அதனால்தான், 'எங்க ஊர்ல பத்து வருடங்களாக ஏரியில் தண்ணீர் நிரம்பாமல் போனதற்கு என்ன காரணம்'ன்னு ஆய்வு செய்து அந்த ஆய்வுக் கட்டுரையை சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் சமர்ப்பித்தோம். அங்க கிடைச்ச பாராட்டுனால, எங்க ஆய்வு அறிக்கையை தமிழக அரசு கவனத்திற்கும் அனுப்பியிருக்கோம். அதைத் தமிழக அரசு செயல்படுத்தினால் 10 வருடங்களாக நிரம்பாத அந்த ஏரி நிரம்பி, அதனால் 15 கிராமங்கள், 80 குக்கிராமங்கள் பாசன வசதி பெறும்" என்று சந்தோஷமாகச் சொல்கிறார்கள் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.


 அரசுப் பள்ளி மாணவர்கள்

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் தனபால், மாணவர்களை வெறும் பாடப்புத்தகம், தேர்வுகள் என்பதோடு மட்டும் சுருக்கி நிறுத்தாமல், சமுதாயத்திற்கு தேவையான விசயங்களில் ஈடுபட வைத்தல், இயற்கையைக் காக்கும் நடவடிக்கைகள், இயற்கை விவசாயத்திற்கு மாற்ற விவசாயிகளிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல் என்று ஆக்கபூர்வமான விசயங்களில் ஈடுபடுத்தி வருகிறார்.

இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிஹரன், ஹரிகிஷோர், சரண், லோகேஷ், தீபக்கண்ணன் மாணவர்கள் வெள்ளியணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் நீர் மேலாண்மையை ஆய்வு செய்தல்,வெள்ளியணை கிராமத்தில் உள்ள வீடுகள் எண்ணிக்கை, மக்கள் தொகை, கழிப்பிட வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, தொழிற்சாலை வசதி, ரயில் நிலையம், விவசாய நிலப்பரப்பு, அவற்றில் விளையும் பயிர்கள் ஆகிவற்றை குறித்து மாதம் ஒரு விசயத்தை நேரடியாக மக்கள், விவசாயிகளிடம் சென்று முறையாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயார் செய்கிறார்கள். அந்த ஆய்வறிக்கையை மாநில, மாவட்ட அறிவியல் மாநாடுகள், கண்காட்சி, நிகழ்ச்சிகளில் சமர்பித்துப் பாராட்டுகளைப் பெறுவதோடு அரசின் கவனத்துக்கும் அனுப்பி வைக்கிறார்கள்.


 அரசுப் பள்ளி மாணவர்கள்

அந்த வகையில்தான், தங்கள் பள்ளி அமைந்துள்ள வெள்ளியணை மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டிய வெள்ளியணை ஏரி கடந்த பத்து வருடங்களாக நிரம்பாமல் இருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஹரிஹரன் தலைமையிலான அந்த மாணவர்கள் குழு, ஆசிரியர் தனபாலின் உதவியோடு ஆய்வை மேற்கொண்டது. முதல்கட்டமாக குளித்தலை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமநாதன்,வெள்ளியணை கிராம நிர்வாக அலுவலர் மங்கையர்கரசி, ஊர் பொதுமக்கள் ஆகியோர்களிடம் வெள்ளியணை ஏரி பற்றியத் தகவல்களை சேகரித்தனர். கடந்த பத்து வருடங்களாக நீர் நிரம்பாமல் இருக்கும் வெள்ளியணை ஏரியில் தண்ணீர் நிரம்பினால் வெள்ளியணை மட்டுமல்ல, சுற்றியுள்ள 15 கிராமங்கள், எண்பது குக்கிராமங்கள் பாசன வசதி பெறும் என்பதை கண்டறிந்தனர். அதோடு, வெள்ளியணை ஏரியிலிருந்து போகும் உபரி நீரால் உப்பிடமங்கலம், வீரராக்கியம், பஞ்சப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள குளங்கள் நிரம்பி அந்தக் கிராமங்களும் பயனடையும் என்பதையும் ஆய்வின் மூலம் மாணவர் குழு கண்டறிந்தது. வெள்ளியணை ஏரியில் போதிய தண்ணீர் நிரம்பாததால், மேற்சொன்ன கிராம மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அல்லாடுவதையும் கண்டறிந்தனர். 

'வெள்ளியணை ஏரியில் முழுமையாக ஏன் தண்ணீர் நிரம்பவில்லை' என்று மாணவர்கள் குழு ஆராய்ந்தபோதுதான், இந்தக் குளத்திற்கு நீர் வர பயன்படும் கால்வாய் தூர்ந்து கிடப்பது தெரிந்திருக்கிறது. இந்த வெள்ளியணை ஏரிக்கு நீர் வரும் கால்வாய் குடகனாறு அணையிலிருந்து 53 கிலோமீட்டர் வரை கால்வாயின் அகலம் குறுகலாக உள்ளதால் வெள்ளியணை ஏரிக்கு வெறும் 20 சதவீதம் தண்ணீரே வந்து சேர்கிறது என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதனால், அந்தக் கால்வாயை இப்போது உள்ளதைவிட தூர் வாரி 4 மடங்கு அகலப்படுத்த வேண்டும் என்பதைத் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்தனர். குடகனாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் வெஞ்சமாங்கூடலூர் வழியாக அமராவதி ஆற்றில் கலந்து, வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. அதைத் தடுத்து வெஞ்சமாங்கூடலூரில் 2 கிலோமீட்டருக்குத் தடுப்பணை கட்டினால், தடையில்லாமல் வெள்ளியணைக் குளத்திற்கு தண்ணீர் வரும் என்பதையும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர். இப்படிச் செய்வதால் வெள்ளியணை ஏரி கடகடவென முழு கொள்ளளவும் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செழித்து, மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று கண்டறிந்தனர். வெள்ளியணை ஏரிக்கு மற்றொரு வழியாக ஜோடார்பாளையத்தில் அணைக் கட்டி, காவிரியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரலாம் என்பதையும் கண்டறிந்தனர். 

 இதுபற்றி பேசிய வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் தனபால்,
 தனபால்“இந்த ஆய்வுகளை மேற்கொண்டு நீர்மேலாண்மை பற்றி தெரிந்துகொண்ட எங்கள் பள்ளி மாணவர்கள் குழு, அதை முதல்ல வெள்ளியணை ஏரிக்கு குளித்தலை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமநாதன், கிராம நிர்வாக அலுவலர் மங்கையர்கரசி, ஊர் மக்கள் அனைவரையும் அழைத்துப் போய் விளக்கியது. அவர்கள் மாணவர்களைப் பாராட்டியதோடு தங்களது பத்து வருட கஷ்டத்தைப் போக்க ஏதுவாக மாணவர்கள் கண்டறிந்த தீர்வுக்கான ஆய்வை செயல்படுத்தினால், தங்கள் கஷ்டம் தீரும் என்று நம்பிக்கை கொண்டனர்.

மாணவர்களின் நீர்மேலாண்மை வழிமுறை அடங்கிய வரைப்படத்தை தமிழக அரசின் கவனத்துக்கும் அனுப்பியிருக்கிறோம். அதைச் செயல்படுத்தினால், பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் நிமிரும். எங்கள் பள்ளி மாணவர்களின் ஆய்வுத் திறனும் மேம்படும். எங்கள் மாணவர்களை நாங்கள் படிப்பில் மட்டுமல்ல, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்கும் விசயங்களிலும் ஆய்வுகள் மூலம் மேலாண்மைகளை தர வைத்து, மக்களின் இன்னல்களைப் போக்க வைக்கும் முறையில் வழிநடத்தி வருகிறோம். எதிர்கால வளமான இந்தியா மலர மாணவர்களை இப்படி ஆய்வுகள் மூலம் எதையும் அறியும்; செயல்படுத்தும் திசைகளை நோக்கி வழிநடத்தி, மாணவர்களின் 'திறனாய்வு திறனை' வளர்த்தெடுப்பது அவசியம் !" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்