வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (18/11/2017)

கடைசி தொடர்பு:11:15 (18/11/2017)

'ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்துள்ளார்கள்!': குற்றம்சாட்டும் பொன்னார்

”ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்துள்ளார்கள்” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில், பல்வேறு ஆவணங்களும் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாள்களாக நடத்தப்பட்ட சோதனை முடிவில்,  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வி-யின் தலைமைச் செயலதிகாரி விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றிரவு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று கூறியுள்ளார்.