வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (18/11/2017)

கடைசி தொடர்பு:12:37 (18/11/2017)

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டவரில் ஏறி போராட்டம் நடத்திய இளைஞர்!

சென்னை அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவர்மீது ரவிச்சந்திரன் என்பவர் ஏறிப் போராட்டம் நடத்தினார். ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, நிறுத்தப்பட்ட பருப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். மீட்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

டவர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், விலைவாசி உயர்வு மற்றும் ஊழலையும், பொதுமக்களின் தற்கொலைகளையும் எதிர்த்துப் போராட டவர்மீது ஏறியுள்ளார். இவர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக டவரில் ஏறி போராட்டம் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது கோரிக்கையாக, “ரேஷன் கடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உளுந்து, பருப்பு வகையை உடனடியாக வழங்க வேண்டும்; விலை உயர்த்தப்பட்ட சர்க்கரையின் விலையைக் குறைக்க வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்ககூடாது” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டவர்மீது ஏறியுள்ளார். 

மேலும், தமிழக முதல்வர், துணை முதல்வர், தமிழக பா.ஜ.க தலைவர் ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார். இவர்கள் மூவரும் பதவியில் இல்லை என்றால், தமிழக மக்கள் எளிமையாக வாழ முடியும். இவர்களால்தான் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வருமான வரிச்சோதனை நடத்திய பணத்தைக்கொண்டு, மக்களின் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கலாம் எனவும் தனது துண்டு அறிக்கையில் கூறியுள்ளார். இவரை போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கிழே கொண்டு வந்தனர். பின்னர் அவர் போலீசாரால் கைது செயப்பட்டார்.