போயஸ் கார்டனில் ஐ.டி.சோதனை ஏன்? வருமானவரித்துறை உயரதிகாரி விளக்கம் #ITRaid | Income Tax Department officer's statement about Poes Garden IT Raid

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (18/11/2017)

கடைசி தொடர்பு:19:18 (18/11/2017)

போயஸ் கார்டனில் ஐ.டி.சோதனை ஏன்? வருமானவரித்துறை உயரதிகாரி விளக்கம் #ITRaid

போயஸ் கார்டன்

சசிகலா குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில்தான் போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர், சோதனையின்போது சிக்கிய லேப்டாப் மற்றும் பென் டிரைவ்வை ஆய்வு செய்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

சசிகலா குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், பணம், வைரங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஆவணங்களை வரிவிடாமல் ஆய்வு செய்துவரும் வருமானவரித்துறையினருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதில் ஒரு கட்டமாக நேற்றிரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. வருமானவரித்துறையினர் தேடி வந்த தடயங்கள் கிடைத்ததும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் போயஸ் கார்டன் வீடு முழுமையாக சோதனை நடத்தப்படவில்லை என்று உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில்தான் சசிகலா, இளவரசி மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த சிலர் தங்கியிருந்தனர். அந்த வீட்டின் ஊழியர்கள், மன்னார்குடி குடும்பத்தினருக்குத் தொடர்புடையவர்கள். சசிகலாவின் முகவரியே போயஸ் கார்டன், வேதா நிலையம்தான். சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரிடையே நடந்த சோதனையில் எங்களிடம் சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் அதன்தொடர்புடைய சில ஆவணங்கள் போயஸ் கார்டனில் இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை செய்த முறைப்படி நீதிமன்ற அனுமதியை பெற்றோம். தற்போது, அந்த வீடு, மன்னார்குடி உறவுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்.

போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும் விவேக் ஜெயராமன்

 போயஸ் கார்டனில் சோதனை நடக்கும்போது நிச்சயம் பிரச்னை ஏற்படும் என்று தெரிந்துதான் முன்கூட்டியே போலீஸாரிடமும் பாதுகாப்பு கேட்டிருந்தோம். அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் சோதனைக்கு எங்களின் அதிகாரிகள் சென்றனர். பகலில் சோதனை நடத்தினால் சிரமம் ஏற்படும் என்று கருதிதான் இரவில் சோதனை நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், இந்தச் சோதனை தகவல் எங்களின் உயரதிகாரிகளில் சிலருக்குத்தான் தெரியும். அந்தளவுக்கு ரகசியமாக சோதனை தகவலை வைத்திருந்தோம்.

எங்களின் திட்டப்படி போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் சென்றோம். நீதிமன்ற உத்தரவைக் காட்டியபிறகுதான் எங்களை உள்ளே அனுமதித்தார்கள். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சசிகலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரின் அறைகளில் சோதனை நடத்தினோம். அங்கிருந்த லேப்டாப், பென் டிரைவ், சில கடிதங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. லேப்டாப், பென் டிரைவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஜெயலலிதா உயிரோடு இருந்தசமயத்தில் போயஸ் கார்டன் பக்கமே வரத் தயங்குபவர்கள் இப்போது துணிச்சலுடன் வீட்டுக்குள் நுழைகின்றனர். ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் எங்களுடைய கோயில். வருமானவரி சோதனையால் வீட்டின் புனிதம் கெட்டுவிட்டது. தமிழக அரசுக்குத் தெரியாமல் இந்தச் சோதனை நடக்க வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில்சொல்ல வேண்டும். வருமானவரி சோதனை குறித்து அவர்கள் இருவரும் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் தொழிலதிபர் சேகர்ரெட்டி வீட்டில் கைப்பற்றிய டைரியில் உள்ளவர்கள்மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது கடமையை வருமானவரித்துறையினர் நியாயமாக செய்ய வேண்டும்" என்றனர். 

வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட சோதனையின்போதே போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கலால் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை. சசிகலா குடும்பத்தினரிடையே சோதனை நடந்தபிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு எங்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குள் செல்பவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். கடந்த 4 நாள்களாக போயஸ் கார்டன் வீட்டிலிருந்து எதுவும் வெளியில் எடுத்துச் செல்லப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அந்த வீட்டில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பது எங்களுக்கும் தெரியும். இருப்பினும் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கைப்பற்ற ஒரு ஆவணத்தின் தொடர்ச்சி ஆவணம் போயஸ் கார்டன் தொடர்புடையதாக இருந்தது. இதனால்தான் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினோம்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்