வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (18/11/2017)

கடைசி தொடர்பு:17:31 (12/07/2018)

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு மீனவர்கள் கண்டனம்!

இந்திய கடலோரக் காவல்படையின்  துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான விசைப்படகு, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தமிழக கடலோரக் காவல் குழும போலீஸார் தடை ஏற்படுத்துவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது கண்டெடுக்கப்பட்ட தோட்டா, இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமானது இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13-ம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஜெபமாலை என்பவரது விசைப்படகுமீது இந்திய கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பக்கிச்சூட்டில் பிச்சை, ஜான்சன் ஆகிய 2 மீனவர்கள் காயமடைந்தனர். மறுநாள் கரை திரும்பிய இவர்கள், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், மீனவர்களுக்கு காயம் ஏற்படுத்திய துப்பாக்கித் தோட்டாவையும் தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்த மீனவர்கள் எடுத்துவந்தனர். இந்நிலையில், மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்திய கடலோரக் காவல்படையினர் அறிக்கை வெளியிட்டனர். ஆனால், மறுநாளே மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து, மீனவர்கள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.

தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள்

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையினரது அல்ல" என தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த கருத்து மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த மீனவர் சங்க நிர்வாகி சகாயம், ’தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோட்டாவை கையோடு எடுத்துவந்துள்ளனர். தற்போது அது, தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் எங்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இனி இவ்வாறு நடக்காது என உறுதியளித்தனர்.

தாக்குதலின் போது மீனவர்கள் கண்டெடுத்த தோட்டா 
 

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக  உரிய விசாரணை நடத்தவும், காயமடைந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் 'இந்த தோட்டா நமது கடலோரக் காவல்படையினருடையது இல்லை' எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, 109 மீனவர்கள் 3 மாதங்களுக்கு மேலாக இலங்கைச் சிறையில் வாடிவரும் நிலையில், அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அவர்களது குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடுகின்றன. இந்த வேதனை தொடரும் நிலையில், தமிழரான பாதுகாப்புத்துறை அமைச்சரே இப்படிக் கூறியிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, தற்போது தோட்டா நமது கடலோரக் காவல்படைக்குச் சொந்தமானது அல்ல எனக் கூறுகிறார். இது, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுதியுள்ளது. ஏற்கெனவே, விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்ட விசைப்படகை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவிடாமல் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தடுத்துவைத்துள்ளனர். தற்போது, மத்திய அமைச்சர் தாக்குதலுக்குக் காரணமான தோட்டா தங்களிடம் இல்லை என மறுக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது' என்றார்.