வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (18/11/2017)

கடைசி தொடர்பு:17:15 (18/11/2017)

கைகொடுத்துப் பாராட்டிய முதல்வர்: கண்கலங்கிய செவிலியர்கள்!

தென் தமிழகத்தில் முதல் முறையாக இதயமாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவை முதலமைச்சர் எடப்பாடி நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். 
 

பழனிச்சாமி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன் இதய மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவக் குழு வெற்றிகரமாக செய்துமுடித்தது. கூலித் தொழிலாளி செளந்தரபாண்டியனுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை மூலம் உயிர்கொடுத்த மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், சிவகங்கையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்குச் செல்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வந்திருந்தார். சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், இதய மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவக் குழுவைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முதலமைச்சர் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

தமிழக முதல்வர் தங்களுக்குக் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்ததால் உணர்ச்சிவசப்பட்ட செவிலியர்கள் சிலர் கண்கலங்கி மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவக் குழுவை உற்சாகப்படுத்திய முதல்வர், ’இன்னும் பல சாதனைகளை நீங்கள் வெற்றிகரமாக செய்துமுடிக்கவேண்டும். தமிழகத்தில் மருத்துவத்துக்காக நிதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுவருகிறது. நோயாளிகளின் நலனை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்போம்’ என்று கூறியதாக மருத்துவர்கள் கூறினர். அப்போது, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.