சந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை!

போயஸ் கார்டன்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வருமானவரித்துறை ரெய்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை, அதிர்ச்சிகரமாக இப்போது ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தையும் தொட்டிருக்கிறது.

மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம் கொண்டது. ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்கள், சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்டு. அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டை, போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் வெறும் விலாசம் அல்ல; ஜெயலலிதா என்ற தமிழக ஆளுமையின் அடையாளம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் இந்த இல்லத்துடன் இன்றுவரை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். போயஸ் இல்லம் 'ஜெயலலிதாவின் அழுகையை ஆறுதல்படுத்தியிருக்கிறது.’ ‘தனிமையை தட்டிக்கொடுத்து மறக்கச்செய்திருக்கிறது.' 'துயரத்தைத் துடைக்க முயற்சித்திருக்கிறது.' 'மனச்சோர்வுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.' இப்படி ஜெயலலிதாவின் இளமைக்காலம் துவங்கி இறப்பின் இறுதிநிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நூற்றாண்டு. 

போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா வாழ்வில் இடம்பெற்றது எப்படி...

சந்தியா

50-ம் ஆண்டில் கணவர் ஜெயராமின் திடீர் மறைவையடுத்து மைசூரில் இருந்து சென்னைக்கு தன் இரு குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார் சந்தியா. தங்கையும் அன்றைய பிரபல நடிகையுமான வித்யாவதி வீட்டில் தங்கியிருந்தபோது சினிமா வாய்ப்புகள்  அவரைத் தேடிவந்தன. சில கன்னடப்படங்களில் அவர் நடித்தார். கொஞ்சம் வசதி வந்ததும் அடையாறு, காந்தி நகரில், நான்காவது மெயின் ரோட்டில் ஓரளவு வசதிகொண்ட ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஜெயலலிதா, ஜெயக்குமார் இருவரின்  பால்ய வயதும் இங்குதான் கழிந்தது. சினிமாவில் ஓரளவு புகழடைந்தபின் தி.நகர் சிவஞானம் தெருவுக்கு இடம்பெயர்ந்தார் சந்தியா.  

பின்னாளில் ஜெயலலிதாவுக்கு கன்னடப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதன்மூலம் இயக்குநர் ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை என்ற படத்தில் முதன்முறையாக அறிமுகமானார். பிறகு, எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் வாய்ப்பு, ஒரே நாளில் அவருக்கு புகழ் தேடித்தந்தது. சில வருடங்களில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையானார். அதன்பிறகு மகளின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டு வீட்டோடு முடங்கினார் சந்தியா.

1960 களின் பிற்பகுதியில் ஜெயலலிதா புகழின் உச்சியில் இருந்தபோது, மகளின் வருங்காலத்துக்காக பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டி எழுப்பும் ஆசை சந்தியா மனதில் உருவானது. தேனாம்பேட்டை பகுதியில் 1967-ம் ஆண்டு 10 கிரவுண்ட் இடத்தை வாங்கினார் சந்தியா. ஜெயலலிதாவின் விருப்பத்துக்காக பலமுறை இந்த வீட்டின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக தற்போது முன்பகுதியில் உள்ளதுபோல் கட்டப்பட்டது. இப்படி சிமென்ட் ஜல்லியோடு மகளின் எதிர்காலத்தையும் குழைத்துக் கட்டிய வீடு போயஸ் கார்டன் இல்லம். ஆனால், பார்த்துப்பார்த்து மகளுக்காக எழுப்பிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தின்போது சந்தியா இல்லாமல் போனாதுதான் ஜெயலலிதா வாழ்வில் நிகழ்ந்த துரதிர்ஷ்டம். 

71-ம் ஆண்டின் மத்தியில் வீடு கட்டும் பணி நிறைவடைந்திருந்த நிலையில் ஒருநாள் (அக்டோபர் 31-ந் தேதி) திடீரென ரத்த வாந்தி எடுத்தார் சந்தியா.  பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் நவம்பர் 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். வீட்டின்  பூமி  பூஜை நடந்த சமயம் அதுதொடர்பாக உறவினர்களுக்கு சேலை எடுப்பது தொடர்பாக  'எங்கிருந்தோ வந்தாள்' படப்பிடிப்பிலிருந்த மகளிடம் பேசவந்தார் சந்தியா. அப்போது இருவருக்குமிடையே சிறு சிறுவாக்குவாதமானது. அப்போதுதான் அமங்களமாக தாயிடம் சொன்ன ஓர் வார்த்தை பலித்துவிட்டதாக ஜெயலலிதாவே சொல்லி வருந்தியிருக்கிறார் பின்னாளில். 

1972-ம் வருடம் மே மாதம் 15-ம் தேதியன்று போயஸ் கார்டன் இல்லம் கிரகப்பிரவேசம் நிகழ்ந்தது. மகளோடு மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடியிருந்திருக்கவேண்டிய சந்தியா வீட்டின் சுவரில் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தார். 

வீட்டுக்குத் தாயின் நினைவாக அவரது இயற்பெயரான வேதா என்பதை சூட்டினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் தவிர, தமிழகத்தின் பிரபலங்கள் பலரும் ஆஜராகியிருந்தனர். ! அப்போது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையே ஏதோ பிரச்னை எனப் பேசப்பட்டது. ஆனால், உதவியாளர் மூலம் விலையுயர்ந்த பரிசுகளை அனுப்பிவைத்திருந்தார் எம்.ஜி.ஆர். கோபத்தில் அவற்றைத் திருப்பியனுப்பினார் ஜெயலலிதா.

விழாவில் வீணை வித்வான் சிட்டிபாபு நிகழ்த்திய சிறப்புக் கச்சேரியின்போது ‘வேதா நிலையத்தின்’ பெயரிலேயே ஒரு பாடலை புனைந்து பாடி ஜெயலலிதாவை மகிழ்வித்தார். வேதங்களையும், வேதங்களின் ஆகம சூத்திரங்களையும் கொண்டு புனையப்பட்ட அப்பாடலை கேட்டு உருகிநின்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு இந்த கிரகப்பிரவேசத்தின்போது இன்னொரு மறக்கமுடியாத சம்பவமும் உண்டு. அது விழாவை சோ புறக்கணித்தது. ஜெயலலிதாவின் இளமைக்கால நண்பரான சோ, குடும்ப நண்பரும்கூட. தனது வீட்டு நிகழ்ச்சிகளை சோ இன்றி நடத்தியதில்லை சந்தியா. அதனால் கிரகப்பிரவேசத்தில் சோ வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஜெயலலிதா. உள்ளூரில் இருந்தும் சோ விழாவுக்கு வரவில்லை. காரணம் கேட்டதற்கு 6 பக்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் சோ. பத்திரிகையை நேரில் தராமல் தன்னை அவமதித்துவிட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்ட சோ, கர்வத்தினால், தான் செய்த தவறுக்கு வருந்துவதாக கூறியிருந்தார்.

தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா நூறாவது பட கொண்டாட்டத்தைக் கண்டது, நம்பிய மனிதர்களால் நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளானது, உறவினர்களால் நடுவீதிக்கு கொண்டுவரும் நிலை உருவானது, வாய்ப்புகள் குறைந்து பொருளாதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அ.தி.மு.க-வில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணி சினிமாவில் வெளிப்படுத்திய சோகம், ஆனந்தம், துக்கம், விரக்தி வெறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் நிஜமாய் அனுபவித்தது இந்த வீட்டில்தான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா வேறு வழியின்றி தன் சித்திகள் மற்றும் உறவினர்களோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வாழத்துவங்கினார்.

கார்டன் இல்லம் வடிவமைப்பு...

இரண்டு மாடிகளுள்ள போயஸ் கார்டனின் முன்பக்க வீட்டில் (பழைய வீடு) கீழ்தளத்தில் நான்கு அறைகள் பெரிய வராண்டா டைனிங் ரூம் கெஸ்ட் ரூம்  இரண்டு ஆபிஸ் ரூம்கள் சமையலறையை ஒட்டி 2 பெரிய ஸ்டோர் ரூம்கள் இரண்டாவது மாடியில் இரு அறைகள். இந்த வீட்டுக்குப் பின்புறம் வீட்டின் வேலையாட்களுக்கு என தனியே கட்டப்பட்ட தனியறைகள் உண்டு. இதுதவிர வீட்டின் பின்புறமுள்ள கார்ஷெட்டுக்கு மேல் பெரிய ரூம்கள் இருந்தன. முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் பிரமாண்ட படுக்கை அறை இருந்தது. இதனருகில் உள்ள பெரிய அறைகளில் ஜெயலலிதாவின் பரிசுப்பொருள்கள், அவரது பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகள் இருந்தன. ஜெயலலிதாவின் முதல் மாடி அறையிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள அறைக்குச் செல்ல  மாடியிலேயே ஒரு பாலம் அமைக்கப்பட்டது. பின்னாளில் அவர் முதல்வரானபின் இதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டபின் 36, 31 ஏ என இரு இலக்கங்கள் அளிக்கப்பட்டன. பழைய வீட்டின் கிழக்குத்திசையில் 31 ஏ என இலக்கம் குறிப்பிடப்பட்ட பகுதி 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 5 மாடிகள் உண்டு...

வீட்டின் முதல்மாடியில் உள்ள அவரது பிரத்யேக அறை.  உறவுகளால், நெருங்கிய நண்பர்களால், தன்னால் அதிகம் நேசிக்கப்பட்டவர்களால் காயமடைந்த சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுக்கு 'கன்பெஷன்' அறையாக இருந்திருக்கிறது. பல பிரச்னைகளுக்கான தீர்வை அவர் கண்டெடுத்த  இடம் அந்த அறைதான்.

எத்தனை பெரிய பிரச்னைகளோடு அந்த அறையில் நுழைந்தாலும் மீண்டும் கதவு திறக்கப்படும்போது புது மனுஷியாக முகத்தில் தெளிவோடு வெளியே வருவார். இப்படி அவரின் கோபதாபங்கள், சாந்தம், கொண்டாட்டம் என அந்தந்த நேர உணர்வுகளின் ஜெயலலிதா வெளிப்படுத்திய உஷ்ணங்களை சுமந்துகொண்டிருக்கிற இல்லம் போயஸ் கார்டன்.

ஜெயலலிதா

விரக்தியின் விளிம்பில் நின்று இந்த வீட்டில் இருமுறை தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவைக் கூட அவர் எடுத்ததாகச் சொல்வார்கள். 
ஒருமுறை போயஸ் கார்டனில் படியேறும்போது ஜெயலலிதா மயக்கமுற்று விழுந்தார். தலையில் அடி. பதறிய ஊழியர்கள்  எம்.ஜி.ஆருக்குத் தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானார். அப்போது உதவிக்கு ஜெயலலிதாவின் சித்திகளைத் தேடினார். ஆனால், அவர்கள் மாடியில் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலைக்காரர்கள் கூறினார்கள். 'மகள் மயக்கத்தில் கிடக்க, அப்படியென்ன அவர்களுக்குள் வாக்குவாதம்' எனக் குழப்பத்துடன் எம்.ஜி.ஆர் மாடிக்குப் போனார். அங்கு, “ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஆனால் கொத்துச்சாவியை யார் வைத்துக்கொள்வது” எனச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் சித்திகள். கோபமாகப் பேசி அவர்களிடமிருந்து சாவியைப் பிடுங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். சில மணிநேரங்களுக்குப்பின் ஜெயலலிதா கண்விழித்தபோது கொத்துச்சாவியுடன் நின்றிருந்த எம்.ஜி.ஆர், “அம்மு யார் எதிரிகள், யார் உறவுகள் எனப் பிரித்தறிந்து ஜாக்கிரதையாக இரு”என அறிவுரை கூறினார்.

எம்.ஜி.ஆரின் அறிவுரைக்குப்பின் உறவினர்களிடமிருந்து சற்றுத் தள்ளியே நிற்கத்துவங்கினார். 1976-க்குப்பின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட விரக்தியினால் வெளியுலகத்திலிருந்து தன் வெளியுலகத்தொடர்புகளை துண்டித்துக்கொண்டு  சுமார் 4 வருடங்கள் இந்த வீட்டில் முடங்கிக்கிடந்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தனிமைக்கு மருந்தாக இருந்தது போயஸ் இல்லம்தான். 96-ம் ஆண்டு இந்த வீட்டில் ஒரு முறை ரெய்டு நடந்ததுண்டு. அதன்பேரில் அவர் கைதுசெய்யப்பட்டதும் தமிழக அரசியல் வரலாறு.


ஜெயலலிதா

நாய்ப்பிரியரான ஜெயலலிதா இந்த வீட்டில் சினிமாவில் இருந்த காலம் முதலே 40க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் முதலில் சந்திப்பது இந்த நாய்களைத்தான். வீடு திரும்பும் அவரை வரவேற்பதும் முதலில் இந்த நாய்கள்தான். அத்தனை பிரியம் வைத்திருந்தார் அவைகள் மீது. 90-களுக்குப்பின் பரபரப்பான அரசியலுக்கு வந்தபின்னர்தான் கட்சிக்காரர்கள் வருகை அதிகரித்தது. இதனால் நாய்கள் தொந்தரவாக இருக்கும் என அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றினார். ஜெயலலிதாவின் இல்லத்தில் அவர் விரும்பி மாட்டிய படம் பாப் கட்டிங்கில் அவரது 4 வயதில் எடுக்கப்பட்ட படம். ஜெயலலிதாவின் வாழ்வில் லட்சக்கணக்கான படங்கள் அவர் எடுக்கப்பட்டாலும் இந்த ஒரு  புகைப்படத்தை அவர் இறுதிவரை ரசித்து பாதுகாத்தார். காரணம் அந்த படம் 1961-ம் ஆண்டு அகில இந்திய புகைப்படக் கண்காட்சியில் முதலிடம் பெற்ற படம் அது. அவரது இறுதிக்காலம் வரை அந்த புகைப்படம் அவரது தனியறையில் மாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் திடீர் அரசியல் தலைவியாக விஷ்வரூபம் எடுத்த சசிகலா, தன் அரசியல் வாழ்வுக்கு சாதகமான விஷயமாக போயஸ் இல்லத்தையே தனது விலாசமாக்க முயற்சி எடுத்தார்.

ஆனால், சசிகலா போயஸ் இல்லத்தில் வசிப்பது  தங்கள் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனக் கணக்குப்போட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவதாக அறிவித்தது. அதற்கு ஜெயலலிதா  ரத்த உறவுகளான அண்ணன் மகன், மகளிடம் இருந்து  சட்டப்படியான எதிர்ப்பு கிளம்பும் எனத்தெரியும். அப்படி சசிகலா குடும்பத்தினரிடமிருந்து போயஸ் இல்லம் வாரிசுகள் கைக்கு செல்வதும் ஒருவகையில் தங்களுக்கு வெற்றி என்றே கணக்கு போட்டது எடப்பாடி தரப்பு. இப்போது அவர்கள் நினைத்ததுதான் நடந்திருக்கிறது. போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி தீபா மற்றும் தீபக் கொடி பிடித்திருக்கிறார்கள். 

ஜெயலலிதா என்ற பெண்மணியின் வாழ்வில் இடம்பெற்ற தனிமனிதர்களை வேட்டையாடிவரும் வருமானவரித்துறை இப்போது அவரது வாழ்வை கிட்டதட்ட அரை நூற்றாண்டுகாலம் பகிர்ந்துகொண்ட போயஸ் இல்லத்தையும் தீண்டியிருக்கிறது. அதிகார மையமாக இருந்தபோது, தன் அருகில் இருந்தவர்களின் ஆட்டங்களை தெரிந்தோ தெரியாமலோ கண்காணிக்கத் தவறவிட்டதற்காக இப்போது ஜெயலலிதாவின் ஆத்மா நிச்சயம் ஒருமுறை வருந்தியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!