வ.உ.சிதம்பரனார் நினைவாக கப்பல்விட்ட பள்ளி மாணவர்கள்!

’கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி, காகிதம் மற்றும் அட்டையிலான கப்பல்களைத் தண்ணீரில் மிதக்கவிட்டனர். 

கோவில்பட்டியில் மாணவர்கள் விட்ட காகிதக்கப்பல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாடார் நடுநிலைப்பள்ளியில் வரலாறு மன்றம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 81-வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. 20 மாணவர்கள் வ.உ.சி.யின் வேடம் அணிந்து, வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட வ.உ.சி.யை நினைவுகூரும் வகையில் 60 மாணவர்கள் காகிதம், சார்ட் அட்டை, தெர்மாகோல் ஆகியவற்றில் கப்பல்செய்து அதில் தேசியக் கொடியை ஒட்டி ஒவ்வொருவராக தண்ணீரில் மிதக்கவிட்டனர். இதில்15 மாணவர்கள் கப்பலில் சிறிய மோட்டார், பேட்டரி பொருத்தி தானாக சுழலும்படி அமைத்திருந்தனர். 

கோவில்பட்டியில் மாணவர்கள் விட்ட கப்பல்

’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை என்பதன் சுருக்கமே வ.உ.சி என்பதாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒருபகுதியாக இலங்கை, கடலோரங்களிலுள்ள ஆங்கிலேயக் கப்பல் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்துதான், 1906-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ’எஸ்.எஸ். காலியோ’ மற்றும் ’எஸ்.எஸ் லாவோ’ என்ற இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கி, தூத்துக்குடி – கொழும்பு இடையேயான கப்பல் சேவையைத் தொடங்கினார். சுதேசி கம்பெனியின், வர்த்தகமையமாக மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் இந்தியாவில், இந்தியர் என்பதைத் தாண்டி  ஒரு தமிழனால் தொடங்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாக அது விளங்கியது. இவரது சேவையால்தான் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது’ என வ.உ.சி. வேடமிட்ட மாணவர் ஒருவர் அவரது கப்பல் சேவைகுறித்து பேசினார்.

கோவில்பட்டியில் மாணவர்கள் விட்ட கப்பல்கள்   

நிகழ்வில் தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறுகுறித்து வேடமிட்ட மாணவர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் பேசினார்கள். மாணவர்கள் தாங்களாகவே கப்பல் செய்ததும், அவரது வரலாறுகுறித்து பேசியதும் அனைவரையும் ஈர்த்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!