அதிகாரிகளுக்கு அமைச்சர் ஸ்பெஷல் விருந்து..! தருமபுரியில் சர்ச்சை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி மாவட்ட அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் விருந்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கிய சம்பவம் அந்த மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

எஸ்.பி.க்கு நினைவுப் பரிசு வழங்கும் அமைச்சர்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. அந்த விழா சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அதிகாரிகளைப் பாராட்ட நினைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி - பென்னாகரம் சாலையில் ஆட்டுகாரம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஜோதி திருமண மண்டபத்தில் அதிகாரிகளுக்கு பாராட்டு விழாவுடன், அசைவ விருந்தும் அளித்தார். இந்த பாராட்டு விழாவில் தருமபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன், எஸ்.பி. பண்டிட் கங்காதர் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகள் முதல், விழாவுக்குப் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் வரவழைத்து நினைவுப் பரிசும், விருந்தும் கொடுத்து கவனித்து அனுப்பினார் அமைச்சர் கே.பி.அன்ழகன். 

அமைச்சர் கொடுத்த விருந்து

பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டுவரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் நடத்திய பாராட்டு விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாராட்டு விழாவுக்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கசேடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தருமபுரி மாவட்ட நிர்வாகத்தில் எங்கும், எதற்கும் லஞ்சம் என்று எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் தற்போது டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பால் 25-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதை எல்லாம் கட்டுப்படுத்தாமல் அமைச்சர் அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா நடத்துவது அவசியமா?’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!