வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (18/11/2017)

கடைசி தொடர்பு:22:00 (18/11/2017)

ஆறு மாதத்தில் கசந்த திருமண பந்தம்...கர்ப்பிணி மனைவியை எரித்துக்கொன்ற கணவன் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காஞ்சிரவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் சீமோன். கடந்த மே மாதம் 22-ம் தேதி இவருக்கும் ஷாலினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஷாலினி திருமணத்தின்போது சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருள்கள் வரதட்சணையாகக் கொண்டுவந்துள்ளார். ஷாலினி  4 மாத கர்ப்பிணியாக இருந்தார். சீமோனுக்கும் ஷாலினிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. அதுபோல நேற்றிரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணி அளவில் ஷாலினியின் வீட்டில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்த புகையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் புதுக்கடை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் சீமோனின் வீட்டுக்குள் வந்தபோது வீடு முழுவதும் புகை மண்டலமாக நிரம்பி இருந்தது. வீட்டில் உள்ள அறையில் ஷாலினி  உடல் கருகிய நிலையில் இறந்துகிடந்தார். அவரது உடல் அருகில் கியாஸ் சிலிண்டர் கிடந்துள்ளது. இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய புதுக்கடை போலீஸார் சந்தேகத்தின்பேரில் ஷாலினியின் கணவர் சீமோனை விசாரித்தனர்.

முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய சீமோன் பின்னர் தன் மனைவியை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அதுபற்றி போலீஸார் கூறுகையில், “நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் ஷாலினியை சீமோன் பலமாக அடித்துள்ளார். வெட் கிரைண்டர் மூடியை எடுத்து ஷாலினியின் முகத்தில் அடித்ததில் அவர் மயக்கமடைந்தார். எனினும் சீமோனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இன்று அதிகாலை கியாஸ் சிலிண்டரை எடுத்துவந்து ஷாலினி  படுத்திருந்த அறையில் வைத்து சீமோன் தீ வைத்துள்ளார். அதில் ஷாலினி உடலில் தீப்பிடித்துள்ளது. உடல் கருகி அவர் உயிர் இழந்தார். தீ வைத்துவிட்டு தப்பியோடும்போது சீமோனின் உடலிலும் தீப்பற்றியதில் காயம் ஏற்பட்டுள்ளது“ என்றனர். 

சிமோன் தற்போது புதிதாக வீடு கட்டியிருக்கிறார் அந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இரண்டு அறைகளில் மட்டும் பணிகளை முடித்து அதில் குடியேறியிருக்கிறார்கள். வீடு கட்டி முடிப்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதுவே கொலையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்துவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க