அப்துல் கலாம் நிதியுதவி அளித்த ராமேஸ்வரம் நூலகத்தில் தேசிய நூலக வார விழா!

50 -வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகள் பங்கேற்ற விழா ராமேஸ்வரம் நூலகத்தில் கொண்டாடப்பட்டது.

                     ராமேஸ்வரம் நூலகத்தில் தேசிய நூலக வார விழா

இந்தியாவில் தேசிய நூலகம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டு, முதலாவது தேசிய நூல‌க வார விழா கொண்டாடப்பட்டத‌ன் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் பொதுமக்கள், மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதைத் தடுக்கவும், அதிகளவில் புத்தகங்களை வெளியிடுவதை ஊக்கப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தேசிய நூலக வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் புத்தகக் கண்காட்சி, பல்வேறு போட்டிகள், கருத்த‌ரங்குகள் மற்றும் விழிப்பு உணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி இன்று ராமேஸ்வரம் நூலகத்தில் நூலக வார விழா நடந்தது. விழாவை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். ’வழி நடத்தும் நூலகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு வாசகர் வட்டத்த‌லைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

ராமேஸ்வரம் கம்பன் கழகத் தலைவர் முரளித‌ரன், நுகர்வோர் இயக்க துணைத் தலைவர் தில்லை பாக்கியம், சுழற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் பல்வேறு விருந்தினர்களுடன்,  மாணவ, மாணவியர்களும் பங்கேற்றனர். இந்த நூலகத்தில் கூடுதல் வாசிப்பரங்கம் கட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ரூ.27 லட்சம் அளித்து, அதனை திறந்தும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!