வெளியிடப்பட்ட நேரம்: 00:39 (19/11/2017)

கடைசி தொடர்பு:00:39 (19/11/2017)

போலீஸ் பாதுகாப்பில் ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி!

போலீஸ் கெடுபிடியில் முதல்வர் பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விஞ்சும் வகையில் செயல்படுகிறார்.

சிவகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்காக நேற்றே மதுரை வந்து தங்கிவிட்டார் முதல்வர் பழனிசாமி. அமைச்சர்கள் உதயகுமாருக்கும், செல்லூர் ராஜூவுக்கும் இடையே யார் எடப்பாடி குட்புக்கில் இடம் பெறுவது என்கிற போட்டி மதுரையில் நடந்துவருகிறது. மதுரை மாநகரகத்தையே மின் விளக்குகளாலும், அலங்கார வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டு மாநகரத்தையே குலுங்கவைத்தார் செல்லூர் ராஜூ.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது போலீஸ் கெடுபிடிகள் எப்படியெல்லாம் இருந்ததோ அதுபோலவே பழனிசாமி வருகைக்காக  தென்மாவட்டம், மேற்குமாவட்டங்களில் இருந்து போலீஸாரும் அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் எப்படி பாதுகாப்பு இருக்குமோ அதேபோன்று எடப்பாடியும் விரும்புகிறார். 24-வது மாவட்டமாக சிவகங்கையில் இந்த நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுமார் ஆறாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மதுரையில் இருந்து சிவகங்கை வரை முதல்வர் வரும் ரோடுகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மெயின் ரோட்டில் உள்ள சில கடைகளை போலீஸாரே அடைக்கச் சொல்லிவிட்டார்கள்.

அதோடு இல்லாமல் இவ்விழா நடைபெறும்  பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயில்கள் அனைத்திலும் போலீஸார் கெடுபிடியாக நடந்துகொண்டார்கள். பத்திரிகையாளர்கள் அனைவரையும் பலகட்ட சோதனைக்குப் பிறகே அனுமதித்தார்கள். சாப்பாடு, குடிக்க தண்ணீர் கூட கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. முதல்வர், வேலுநாச்சியார் பங்களாவில் ஓய்வு எடுத்ததால் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. முதல்வர், நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பிறகும் கூட கட்சி தொண்டர்களையோ, பொதுமக்களையோ போலீஸார் அனுமதிக்கவில்லை. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது இந்த அளவுக்குப் போலீஸ் கெடுபிடி இல்லை என்கிறார்கள் ஒரு சில போலீஸ் அதிகாரிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க