வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (19/11/2017)

கடைசி தொடர்பு:04:15 (19/11/2017)

டெல்லியிலிருந்து வந்த அழுத்தம்... ரெய்டு பற்றி வாய் திறந்த எடப்பாடி பழனிசாமி!

தினகரனைப் பற்றி போல்டாக பேசுங்கள் என்று டெல்லியிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால்தான் முதலமைச்சர் எடப்பாடி நேற்று  மாலை மதுரை விமானநிலையத்தில் ஆவேசப் பேட்டி கொடுத்தார் என்று சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அதனால்தான் இதுவரை தினகரன் பற்றியும் கவர்னரின் ஆய்வுக்கூட்டம் நடத்தியது பற்றியும் ஒருசில அமைச்சர்கள் பேசி வரும் நிலையில் நேற்று முதல்வர் பேசியுள்ளாராம். இது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்ப மதுரை விமானநிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

எடப்பாடி பழனிசாமி

அப்போது எடப்பாடி, `கவர்னர் கோவையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது,  அதோடு சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டார். இது ஒன்றும் தவறில்லையே. அவர் தமிழக அரசை சிறப்பாக செயல்படுவதாக பாரட்டியுள்ளார். தமிழகத்தில் வருமான வரித்துறை ஏன் சோதனை செய்கிறது என்பது ஊடகங்களுக்குத் தெரியும். வருமான வரித்துறை சோதனை செய்வது வழக்கம். சசிகலா
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதான புகாரால் சோதனை நடத்தப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சிலபேர் செய்த தவறால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நினைவில்லமாக ஆக்க வேண்டிய இடத்தில் சோதனை நடந்துள்ளது. இந்த டிடிவி தினகரன் என்பவர் யார். அவருக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம்... நான் 1974-ம் ஆண்டிலிருந்து கட்சியில் இருக்கிறேன். கட்சிக்கு சோதனை வந்த காலத்தில் இருந்திருக்கிறேன். ஆறு முறை சிறைக்கு சென்றுள்ளேன். தினகரன்  கட்சிக்கு என்ன சேவை செய்திருக்கிறார். ஊடகங்கள்தான் பரபர்ப்புக்காக தினகரனை பெரிய ஆளாக ஆக்க அவரிடம் கருத்து கேட்கிறீர்கள். நான் படிப்படியாக ஒவ்வொரு பதவியிலும் உழைத்து  இன்று இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறேன். எனக்கு தினகரன் பதவி தரவில்லை. அவர் தேர்வு செய்யவில்லை. எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்தனர். ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளராக அவரே அறிவித்துக்கொண்டார்' என்று ஆவேசமாக பேசிவிட்டுச் சென்றார் முதல்வர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க