வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (19/11/2017)

கடைசி தொடர்பு:09:50 (19/11/2017)

"சிங்கம் இல்லாத போயஸ் குகையில்...”: வருந்தும் தம்பிதுரை

”சிங்கம் இல்லாத போயஸ் குகையில் நடந்த நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன” என தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் இரண்டு நாள்களுக்கு முன்னர் இரவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து தம்பிதுரை எம்.பி கூறுகையில், “போயஸ் தோட்ட குகையில் சிங்கம் இல்லாதபோது நடந்த நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது. எதுவானாலும் அ.தி.மு.க-வை அழிப்பதற்கு யாராலும் முடியாது. ஆலமரம் போல் வளர்ந்துள்ள கட்சியை அழிக்க யாரும் இல்லை” எனக் கூறினார்.