வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (19/11/2017)

கடைசி தொடர்பு:08:53 (20/11/2017)

போட்டுக்கொடுத்தாரா முன்னாள் உதவியாளர்?... பூங்குன்றனைச் சுற்றும் சர்ச்சை!

பூங்குன்றன்

“பூங்குன்றன் பேசுகிறேன்...” - ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த வார்த்தையைக் கேட்டாலே அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒருகணம் வெலவெலத்துப்  போய்விடுவார்கள். கார்டனில் சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக விளங்கிய பூங்குன்றனை நோக்கித்தான் இப்போது சர்ச்சைகளும் வரிசைகட்டி நிற்கின்றன. போயஸ் கார்டனில், வருமானவரித்துறை ஆய்வு நடத்தியதன் பின்னணியில் பூங்குன்றன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவருடைய உதவியாளராகவும் அறியப்பட்டவர் பூங்குன்றன். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், சசிகலா தரப்பும் இவரை அரவணைத்துக்கொண்டது. பூங்குன்றனின் தந்தை புலவர்  சங்கரலிங்கம்தான் ஜெயலலிதாவுக்கு ஆரம்ப காலத்தில், அறிக்கைகள் எழுதித்தரும் பணியினை மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் சங்கரலிங்கம் கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவுக்கு உதவியாளர் ஒருவர் தேவை என்ற நிலை வந்தபோது, ஊரில் இருந்த தனது மகன் பூங்குன்றனை அந்தப் பணியில் இணைத்துவிட்டார் சங்கரலிங்கம். ஆரம்பத்தில், கார்டனுக்கு வரும் ஃபேக்ஸ் மற்றும் கடிதங்களை சரிபார்க்கும் பணியில் இருந்த பூங்குன்றன், கொஞ்ச காலத்திலேயே ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார். அதன்பிறகு போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு அடுத்து சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக பூங்குன்றன் உருமாறினார். 

பூங்குன்றன் மனது வைத்தால், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பதவி முதல், ஒன்றிய செயலாளர் பதவி வரை எது வேண்டுமானாலும் எளிதாகக் கிடைத்துவிடும் என்ற நிலையும் ஒருகட்டத்தில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு  இவர் மீது புகார் கிளம்பியதால், கார்டனிலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால், பூங்குன்றன் இடத்துக்கு வந்த வேறு உதவியாளர்கள் யாரும் நிலைக்கவில்லை. எனவே, மீண்டும் கார்டனுக்கு அழைக்கப்பட்டார் பூங்குன்றன். அதன்பிறகு கட்சி விவகாரங்களில் அதிகம் தலைகாட்டாமலே இருந்தார். அதே நேரம் சசிகலா குடும்பத்துக்கு வேண்டியதை செய்து கொடுத்தார். சசிகலா குடும்பத்தினருடன் பூங்குன்றன் அனுசரித்து நடந்துகொண்டதால்தான் பத்து ஆண்டுகளுக்கும்  மேலாக கார்டனில் பவர்ஃபுல்லாக வலம் வரமுடிந்தது. 

ஜெயலலிதா

போயஸ்கார்டனில்,  பூங்குன்றனுக்கு என தனி அறையும் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பூங்குன்றன் தொடர்ச்சியாக கார்டனுக்கு சென்று வந்தார். சசிகலாவின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்த சில மாதங்கள் வரை கட்சி விவகாரங்களை தொடர்ந்து பூங்குன்றனே கண்காணித்து வந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு போயஸ் கார்டன் இல்லம் பூட்டப்பட்டது. ஆனால், பூங்குன்றன் மட்டும் தினமும் கார்டனுக்கு சென்று அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பணி செய்துவந்தார். போயஸ் கார்டனின் ஒரு சாவியும் பூங்குன்றனிடம் இருந்துள்ளது. கடந்த வாரம் வருமான வரித்துறை சசிகலா உறவுகள் மற்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் அதிரடி ரெய்டு நடத்தியபோது, பூங்குன்றன்  வீட்டிலும்  வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தினர். அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்போது சசிகலா குறித்து பல்வேறு தகவல்களை அவரிடம் கேட்டுள்ளார்கள். வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சில தகவல்களையும் பூங்குன்றன் அளித்துள்ளார். குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்தபோது, தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய ஒப்பந்தங்களில் சசிகலாவின் தலையீடு இருந்த விவகாரத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பூங்குன்றன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

அந்த ஒப்பந்த விவரங்கள் குறித்த ஆவணங்களை பூங்குன்றனிடம் அதிகாரிகள் கேட்டபோது, 'அவை அனைத்தும் சசிகலா வசமே உள்ளது' என்ற தகவலையும் வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் போயஸ் கார்டன் வீட்டை சோதனையிடும் முடிவுக்கு வருமானவரித்துறையினர் வந்துள்ளனர். போயஸ் கார்டன் வீட்டில், சசிகலாவின் அறை எது, அவரது அலமாரி மற்றும் கம்ப்யூட்டர் போன்றவை எங்கிருக்கும் போன்ற அனைத்து விவரங்களையும் பூங்குன்றன் வாயிலாகவே அதிகாரிகள் பெற்றுள்ளார்கள். அதன்பிறகு நீதிமன்ற ஆணையோடு, போயஸ் கார்டன் வீட்டுக்குள் அதிகாரிகள் படை நுழைந்துள்ளது. போயஸ்கார்டனின் ஒரு சாவி இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொரு சாவி, பூங்குன்றனிடம் இருந்துள்ளது. பூங்குன்றனிடம் இருந்த சாவியை வைத்துதான் கார்டன் வீட்டுக்குள் வருமானவரித்துறையினர் நுழைந்துள்ளார்கள்.

 

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

கார்டனில் சசிகலாவின் அறையை மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அவர் அறையில் இருந்த ஒரு கம்ப்யூட்டர், ஒரு லேப்டாப், நான்கு பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்துள்ளார்கள். சசிகலா அறையில் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால்தான், நான்கு மணி நேரத்தில் வருமானவரித்துறை சோதனையை முடிக்க முடிந்துள்ளது. அதே நேரம் பூங்குன்றன் கொடுத்த தகவலால் மட்டும் கார்டனில் சோதனை நடத்தவில்லை என்றும், ஏற்கெனவே வருமானவரித்துறைக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில்தான் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடந்தது என்றும் சொல்லிவருகிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சிலர். 

சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்களோ,  'கார்டனில் ஆல் இன் ஆலாக இருந்த பூங்குன்றனால்தான் வருமான வரித்துறை கார்டன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது என்ற  கடுப்பில் சசிகலா உறவுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.'


டிரெண்டிங் @ விகடன்