ராமேஸ்வரம் - மண்டபம் பகுதி மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிப்பு

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  இன்று அதிகாலை சிறைபிடித்து சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை  கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த  4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்  தாக்குதலில் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல்படை அதிகாரிகள் நேரில் சந்தித்து  ஆறுதல் கூறியதுடன் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளித்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். 

மீனவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  மீனவர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுளில் இரூந்து கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.

இதன் பின்னர் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த 2 விசைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மண்டபத்தை சேர்ந்த  சண்முகவேல், நடராஜன்,முனியாண்டி, தர்மராஜ்  மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்ந ஜெய்லஸ், மெல்சன், விஜய், நவீன் ஆகிய 8 மீனவர்களையும், அவர்களது இரு விசைபடகுகளையும் சிறை கை  சென்றனர்.  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காரைநகரில் உள்ள கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கை சிறையில் 109 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 8 மீனவரகளை சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!