கோவையின் அடையாளமா ஈஷா?: சர்ச்சையைக் கிளப்பும் சேரன் ரயில்! | Isha Yoga Center's photo in Cheran express train

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (19/11/2017)

கடைசி தொடர்பு:11:45 (19/11/2017)

கோவையின் அடையாளமா ஈஷா?: சர்ச்சையைக் கிளப்பும் சேரன் ரயில்!

கோவை – சென்னை சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் படம் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சேரன் ரயில்

கோவை – சென்னை சென்ட்ரல் இடையே, தினசரி சேரன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது வழக்கம். கோவை ரயில் நிலையத்தில் இருந்து, தினசரி 10.40 மணிக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, தினசரி 10.10 மணிக்கும் இந்த ரயில் புறப்படும். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 10-ம் தேதி முதல், இந்த ரயிலில் அதிநவீன எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பெட்டிகளில், கோவையின் அடையாளமாக, ஈஷா யோகா மையத்தின் படம் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பன்னீர்செல்வம்பொதுவாக ரயில்களில் அந்தந்த ஊர்களின் பெயர் அருகே, சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் அல்லது அந்த ஊரின் அடையாளமாக திகழும் ஏதாவது ஒன்று இருக்கும். கோவை ரயில்களில், கோவை ரயில் நிலையங்கள் அல்லது இயற்கைக் காட்சிகள் இருக்கும். ஆனால், தற்போது ஈஷா படம் வைக்கப்பட்டுள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகநீதி கட்சியின் தலைவரும், வழக்கறிருமான பன்னீர்செல்வம் கூறுகையில்," தென்னிந்தியாவின் மான்செஸ்டராக கோவை இருக்கிறது. கோவையின் அடையாளங்களாக முன்னிலைப்படுத்த எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, வனத்தை சூறையாடி, வனவிலங்குகளை அழித்த ஜக்கி வாசுதேவின் ஈஷாவை, முன்னிலைப்படுத்தும் ஈஷாவை கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இதைக் கண்டித்து, கோவையில் நாளை போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும், சேலம் கோட்ட மேலாளரைச் சந்தித்து, சேரன் ரயிலில் இருந்து ஈஷாவின் படத்தைநீக்க மனு அளிக்க உள்ளோம்"  என்றார்.