வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (19/11/2017)

கடைசி தொடர்பு:14:18 (21/11/2017)

‘அறம்’ பாடல் பின்னணியில் அனிதாவின் அழுகுரல்! - பாடலாசிரியர் உமாதேவி உருக்கம்

மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள  ‘அறம்’ திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜிப்ரான் மெட்டுக்கு யதார்த்த வரிகளை அள்ளித் தெளித்துப் பாடலோடு ஒன்றிப்போக வைத்துள்ளார் பாடலாசிரியர் உமாதேவி. ‘வைக்கம்’ விஜயலட்சுமி பாடியுள்ள,  ‘தோரணம் ஆயிரம்... பார்வையில் தோன்றிடும்; காட்சியில் என்ன இருக்கு’ பாடல், கடைநிலையில் இருக்கும் மக்களுக்கிடையிலான காதலைப் பிரதிபலிக்கிறது. ‘புது வரலாறே... புறநானூறே; இனம் மறக்காதே... திமிராய் வா வா’ என்று பாடகர் சுந்தரய்யர் பாடியுள்ள பாடலின் வரிகள் ஆழமானவை. இதைப் ‘புரட்சிப் பாடல்’ என்று சொன்னால் மிகையாகாது. 


aram

 

உமாதேவியின் பாடல் வரிகளால் எப்படி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது..?  

கவிஞர் உமாதேவியிடம் பேசினோம்...

“நான் எழுதும் பாடல்கள், என் வாழ்க்கையில் கடந்து வந்தவற்றைப் பிரதிபலிக்கிறது என்று கூறலாம். என் வாழ்க்கையின் பின்புலத்தில் இருந்து கிடைத்த வார்த்தைகள்தான் அவை ஒவ்வொன்றும்.  ‘அறம்’ படத்தின் இயக்குநர் தோழர் கோபி நயினார் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ‘அறம்’ பட எடிட்டிங் பணிகளின்போது படத்தின் ஒருசில காட்சிகளை எனக்குப் போட்டுக் காட்டினார். அதன்பிறகு நிறையப் பேசினார். பாடல் வரிகள் எப்படி இருக்க வேண்டும், படத்தின் வாயிலாக மக்களுக்கு அவர் சொல்ல நினைப்பது எவை எனப் பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவரின் திரைக்கதை முழுக்கமுழுக்க இந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். பாடல் வரிகள் ஆழமாக இருக்க வேண்டும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். நான், படத்தின் சில காட்சிகளைத்தான் பார்த்தேன். அந்தக் காட்சிகளே என்னைக் கதைக்குள் பயணிக்கவைத்துவிட்டது. பாடல் வரிகள் உணர்ச்சிபூர்வமாக அமைந்ததற்கு மற்றொரு காரணம், தோழர் கோபியின் ‘நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்’ என்னும் புத்தகம். இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்த கோபி, ‘இதைப் படியுங்கள். என் வாழ்க்கை என்ன... என் கொள்கை என்ன என்பது பற்றிய புரிதல் வரும்’ என்றார். அந்தப் புத்தகத்தை வாசித்ததும் மிகப்பெரிய கலைஞனாகத் தோழர் கோபியைப் பார்த்தேன். அந்தப் புத்தகமும், படத்தின் காட்சிகளும்தான் என் வரிகளுக்கு வலிமையைச் சேர்த்தன. 

‘அறம்’ படத்தின் கதைக்குள் முழுமையாக நான் பயணிக்கத் தொடங்கினேன்; குழிக்குள் இருக்கும் அந்தக் குழந்தையாகவே என்னைக் கற்பனை செய்துகொண்டேன்; அதிகாரவர்க்கத்தினால் என்னைக் காப்பாற்ற முடியாது; இது, அரசின் கையாளாகத்தனம்; என்னை நானே காப்பாற்றிக்கொள்வேன்; பிறரின் எண்ணங்களுக்கு நான் இரையாக மாட்டேன்; நான் சாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் முன், நான் வாழ்ந்து காட்ட வேண்டும்; என் கோபமும் ரோஷமும்தான்,  ‘புது வரலாறே... புறநானூறே; இனம் மறக்காதே... திமிராய் வா வா..’ பாடல். இது, ஒரு சில நொடிகளின் கோபமல்ல... ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் இரண்டாயிரம் ஆண்டுக் கோபம்.

aram
 

படத்தின் க்ளைமாக்ஸில் ஒரு காட்சி வரும்.. ‘குழந்தை செத்துப் போயிடும்... ஐந்து லட்சம் ரெடி பண்ணு’  என்று அரசியல்வாதி ஒருவர் சொல்வார். குழிக்குள் இருக்கும் குழந்தையை மண்ணைப்போட்டு மூடிவிட்டுப்போக நினைப்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தக் குழந்தையை மண்ணைப்போட்டு மூடவேண்டும் என்று எண்ணும் அந்த மனநிலை, மனநோய்தான் அரியலூர் மாணவியான அனிதாவைக் கொன்றது. அந்தக் குழிக்குள் இருக்கும் சிறுமிக்கும், அனிதாவுக்கும் வித்தியாசமே கிடையாது. இரண்டுமே அதிகாரவர்க்கத்தின் கையாலாகாத்தனம்தான். குழிக்குள் இருந்த குழந்தையை மீட்டுவிட்டோம்; அனிதாவை விட்டுவிட்டோம். அனிதாவை மனதில் நிறுத்தி எழுதியதுதான் க்ளைமாக்ஸில் வரும், ‘நெரிக்கும் கரங்கள் உனது நேசங்களே... எனை ஆளும் தேசமே’ என்னும் பாடல்.  இந்தப் பாடலை நள்ளிரவு 1.30 மணிக்கு எழுதி முடித்தேன்; எழுதி முடித்ததும் கதறி அழுதேன்; மிகமிகத் துயரத்தோடு இந்தப் பாடலை எழுதினேன்” என்றார், அதற்குமேல் பேச முடியாமல் குரல் தழுதழுத்த நிலையில்.

அறம் அனிதா

கவிஞர் உமாதேவி குறிப்பிட்ட அந்தக் கடைசிப் பாடல், இணையத்தில் இன்னும் வெளிவரவில்லை. அந்தப் பாடலைத் திரையில் மட்டும்தான் கேட்க முடியும். அனிதாவின் குரலாய் ஒலித்த அந்தப் பாடல் வரிகள் இதோ...

‘‘அணைக்கும்தொனியில் 
நெரிக்கும் கரங்கள் உனது நேசங்களே... 
எனை ஆளும் தேசமே
எனக்குத் துணைகள் உனது இல்லை...

எனது சுவாசங்களே; எனை ஆளும் தேசமே
கண்களை எரிக்கலாம்; கனவு எரியுமோ?
தலைமுறைக் கனவுகள் உனக்குப் புரியுமோ?

குடிசை விளக்கில் வளரும் 
நானொரு ஞானசூரியன்! 
எனை ஆளும் தேசமே
பாழும் கதவு எனைக்கண்டு வழிமூட 
மீறி நுழைந்தேன் நானந்த ஒளிபோல... 

நூலைக் கடந்து நானென்ன விதிபோட
நூலை அறுத்தேன் காத்தாடி போலாட...
கலைந்துபோகாத சோகங்கள் கிடையாது... 
கடலில் நீந்திடும் மீனுக்குத் தொலைவேது?

குடிசை விளக்கில் வளரும் 
நானொரு ஞானசூரியன்! 
எனை ஆளும் தேசமே
அணைக்கும்தொனியில் 
நெரிக்கும் கரங்கள் உனது நேசங்களே... 
 
எனை ஆளும் தேசமே
எனக்குத் துணைகள் உனது இல்லை...
எனது சுவாசங்களே எனை ஆளும் தேசமே...’’
 

உமாதேவியிடம் பேசிய பிறகு, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே இன்னொரு தடவை ‘அறம்’ படத்தைப்  பார்க்க வேண்டும் என்று தோன்றியது, அவர் எழுதிய வலி மிகுந்த வரிகளுக்காக..

உண்மையில், உமாதேவி ஒரு யதார்த்த கவிஞர்தான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க