அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட போயஸ் கார்டன்...!

மோடியுடன் ஜெயலலிதா - போயஸ்கார்டன்

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கும், தமிழக அரசியலுக்கும் ஏன்... இந்திய அரசியலுக்கும்கூட மிக நெருங்கிய தொடர்பும், சுவாரஸ்யமான வரலாறுகளும் உண்டு.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 1970-களில் தொடங்கி இப்போதுவரை திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கமே இருந்து வருகிறது எனலாம். 1967-ம் ஆண்டு, அப்போது வலுவாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகத்தான வெற்றிக்குத் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் முக்கியப் பங்குவகித்தார். திரைப்படத்துறையில் வசன கர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்த இப்போதைய தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் வசீகர மேடைப்பேச்சும், பேரறிஞர் அண்ணாவின் அலங்கார மொழியிலான கவர்ச்சியான சிலேடைப் பேச்சும், தி.மு.க-வின் தீவிர இந்தி மொழி எதிர்ப்பு நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சியை அப்போது படுதோல்வியடையச் செய்ததுடன், இன்றுவரை தமிழகத்தில் அரியணை ஏறவிடாமல் தடுத்துவிட்டது. இந்த வரலாறெல்லாம் நாம் அறிந்ததே...!

அந்தவகையில், திரைப்படத் துறைக்கும் தமிழக அரசியலுக்கும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அ.தி.மு.க-வை உருவாக்கி, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தது, அவர் மறையும்வரை தமிழகத்தின் முதல்வர் பதவியை வகித்தது, பின்னர் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது எல்லாமே தனியான வரலாறுதான். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், பிளவுபட்ட அ.தி.மு.க. 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின், ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்த அ.தி.மு.க, 1991-ல் ராஜீவ் படுகொலைக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது.

எம்.ஜி.ஆர். இருந்தவரை அவரின் இல்லம் அமைந்துள்ள ராமாவரம் தோட்டம், எவ்வளவு பிரபலமோ, அதேபோல், அவரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டம் அ.தி.மு.க-வினரிடையே மிகுந்த பிரபலத்தை எட்டியது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே, அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர், சத்துணவுத் திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எனக் கட்சியின் பல்வேறு பதவிகளை ஜெயலலிதா வகித்து வந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் இரு அணிகளாகப் பிரிந்து அ.தி.மு.க. போட்டியிட்ட நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அணியே 27 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இதன்மூலம் ஜெயலலிதா முதல்முறையாக தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். இதன்மூலம் போயஸ்கார்டனில் அரசியல் பரபரப்பு, 1984-ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டது எனலாம். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், போயஸ்கார்டன் இல்லம், அதிமுக்கியத்துவம் பெறத் தொடங்கியது. 

அத்வானியுடன் ஜெயலலிதா

அப்போது முதல், ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காக போயஸ்கார்டன் இல்லத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தேர்தல் கூட்டணிக்காகவும், நட்புரீதியாகவும் வந்து, ஜெயலலிதாவைச் சந்தித்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதற்கு முன், ஒருமுறை அவர் சென்றுகொண்டிருந்த கார், மாமண்டூர் அருகே விபத்துக்குள்ளாகி, அவரும், அவருடன் பயணம் செய்த சசிகலாவும் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது, ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் வந்து, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 

தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி 1991-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எனினும், 1996-ல் இந்தக் கூட்டணி, தோல்வியைத் தழுவியது. மீண்டும் 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு, பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் வந்து பேச்சு நடத்தினர். ஓராண்டு காலம் பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, பின்னர் அதனை முறித்துக் கொண்டார். மீண்டும் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எல்.கே. அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வைத்துப் போட்டியிட்டது என்றாலும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மத்தியில் மீண்டும் வெற்றிபெற்றது. 

அருண் ஜேட்லி  - ஜெயலலிதாஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும், அவர் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்திலும், அருண் ஜெட்லி, எல்.கே. அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியுள்ளனர். தவிர, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்ட நிகழ்வும் உண்டு. குஜராத் முதல்வராக மோடி 2012-ம் ஆண்டு பதவியேற்றபோது, ஜெயலலிதா அந்த விழாவில் பங்கேற்றார். மேலும், ரவிசங்கர் பிரசாத் போன்ற பி.ஜே.பி-யின் முன்னணி தலைவர்களும் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன், சுதாகர் ரெட்டி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோரும் கூட்டணி குறித்து போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, எண்ணற்ற தலைவர்கள் வந்து செல்லும், முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் கேந்திரமாகத் திகழ்ந்தது போயஸ் கார்டன். சுமார் 30 ஆண்டுகள் தன் அரசியல் சகாப்தத்தை போயஸ்கார்டனில் அரங்கேற்றிய ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், தற்போது சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

'ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்கள் முன்பு அறிவித்தார். மேலும், அவரின் இறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தற்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டுள்ளார். 

போயஸ்கார்டன் பாதுகாப்புஅரசியல் பரபரப்பு நிறைந்த இல்லமாகத் திகழ்ந்த, ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வீடு, தற்போது பல விமர்சனங்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, "தன் அத்தையின் பரம்பரை சொத்தான போயஸ்கார்டன் வீடு தனக்கும், தன் சகோதரர் தீபக்கிற்கும்தான் சொந்தம்; தாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான, சட்டபூர்வமான வாரிசு" என்றும் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வீட்டில் ஜெயலலிதாவுடன் வசித்த சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். இளவரசியின் மகன் விவேக், தற்போது மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். 

இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதாவின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. 1996-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் போயஸ்கார்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திய பின்னர், 21 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. 

தமிழகத்திலும், இந்திய அளவிலும் எத்தனையோ அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாகத் திகழ்ந்த போயஸ்கார்டன் இல்லம், இப்போது மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது....!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!