வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (19/11/2017)

கடைசி தொடர்பு:10:38 (20/11/2017)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்! - புலம்பும் ராமநாதபுரம் மக்கள்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டங்கள் தோறும் அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவினை பிரபலப்படுத்தும் வகையில் பள்ளிக் குழந்தைகளைக்கொண்டு மாரத்தான் ஓட்டப் பந்தயம், புகைப்படக் கண்காட்சி போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்துக்கான விழா இம்மாதம் 25-ம் தேதி ராமநாதபுரம் அம்மா பூங்காவில் நடக்க உள்ளது. இந்த விழாவின் தொடக்கமாக இன்று காலை ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே மாரத்தான் போட்டி மற்றும் புகைப்படக் கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் தொடங்கின.

ராமநாதபுரம் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி 


அமைச்சர் மணிகண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் பேருந்து நிலைய பயணிகள் நிழற்குடை அருகே அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியினையும் அமைச்சர் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் மாவட்ட அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எம்.ஜி.ஆர் விழா மாரத்தான் போட்டிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்ட ராமநாதபுரம்


சுமார் அரை மணிநேரம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்காக ராமநாதபுரத்தின் பிரதான பகுதியான பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இந்நேரத்தில் ராமேஸ்வரத்திலிருந்து வரும் அரசுப் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும்  சுற்றுச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. அவ்வாறு திருப்பி விடப்பட்ட வாகனங்களுக்கு வழிகாட்டும் ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாததால் புதிதாக இப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வழி தெரியாது சுற்றித் தவித்தனர். மேலும், விழா நடப்பது குறித்தோ, இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது குறித்தோ காவல்துறையினரால் முறையாகவோ, முன்னதாகவோ அறிவிக்கப்படவில்லை. இதனால் டூ வீலர், ஆட்டோ, நகரப் பேருந்துகளில் பயணித்த பொதுமக்கள் பாதி வழியிலேயே தடுக்கப்பட்டு திருப்பி விடப்பட்டதுடன், பேருந்துகளில் வந்தவர்கள் வழியிலேயே இறக்கிவிடப்பட்டனர்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் புகழைப் பரப்புவதாகச் சொல்லிக்கொண்டு நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்சிகளை முறைப்படி அறிவிக்காததால் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கே இத்தனை அலைக்கழிப்பை சந்தித்த ராமநாதபுரம் மக்கள் வரும் 25-ம் நடக்க உள்ள முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது எத்தகைய இன்னல்களை சந்திக்கப்போகிறோமோ என்ற வெறுப்பில் உள்ளனர்.