திறந்தவெளி கழிப்பறையில்லா மாவட்டமாக நெல்லை மாறும்! - சந்தீப் நந்தூரி உறுதி

அடுத்த 2 வாரத்துக்குள் நெல்லை மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

திறந்தவெளி கழிவறை இல்லாத நிலை

உலக கழிப்பறை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பறைகள் கட்டுவதன் அவசியம்குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலோசனை நடத்தினார். கிராமப் பகுதிகளில் கழிவறை கட்டுவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறி, வீடுகளில் கழிவறை கட்டுவதற்கு ஏற்பாடு செய்த மகளிர் சுய உதவிக் குழுவினரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான பணிகளை ஆட்சியர் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நெல்லை மாவட்டத்தில் இதுவரை 80,000 வீடுகளில் கழிவறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டப்பட்டுவிட்டது. இன்னும் 20,000 வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட வேண்டும். அவற்றைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத் திறனாளிக்கு வசதி

அதனால் இந்த மாத இறுதிக்குள் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுவிடும். அதன் மூலம், திறந்தவெளி கழிவறை இல்லாத மாவட்டமாக நெல்லை மாறும். அதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் உடனடியாகத் தொடங்கப்படும். 

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுக்கழிவறைகள், கட்டணக் கழிவறைகள் போன்றவை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். கட்டணக் கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அதனால் கட்டண விவரத்தை எழுதி வைக்க உத்தரவிட்டுள்ளோம். அதனையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!