வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (19/11/2017)

கடைசி தொடர்பு:10:07 (20/11/2017)

வழக்கறிஞர் செம்மணி மீதான தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

வழக்கறிஞர் செம்மணியை அடித்து உதைத்து கால்களை உடைத்த காவல்துறையினர்மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்ற வழக்கறிஞரான செம்மணியை காவல்துறையினர் நவம்பர் 3-ம் தேதி அடித்து உதைத்து வேனில் தூக்கிச் சென்றனர். செம்மணிமீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில், டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தில் சில கேள்விகளைக் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக தாக்கினார்கள். 

போலீஸார் அவரை அடித்து உதைத்ததில், அவருடைய கால்கள் உடைந்தன. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் வழக்கறிஞர்கள் நடத்தினார்கள். இதையடுத்து, இந்த விவகாரத்துக்குக் காரணமான டி.எஸ்.பி-யான குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் மற்றும் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

ஆனாலும், அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்திவருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வள்ளியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை தெற்கு மாவட்டம் வள்ளியூர் வடக்கு ஒன்றியம் சார்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், செம்மணியைத் தாக்கிய காவல்துறையினர்மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.