மாட்டுக் கொட்டகையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை! -விபத்து ஏற்படும் அபாயம் | Cows are roaming in National highways which causes accidents in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (19/11/2017)

கடைசி தொடர்பு:09:52 (20/11/2017)

மாட்டுக் கொட்டகையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை! -விபத்து ஏற்படும் அபாயம்

நெல்லை-தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படும் ஆபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலை மாடுகள்

நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சமாதானபுரம் பகுதிகளில் மட்டும் அல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளையும் மாடுகள் ஆக்கிரமித்துள்ளன. சாலைகளில் மாடுகள் படுத்துக் கிடப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், அவசரமாக பிரேக் பிடிப்பதால் பின்னால் வரும் வாகனங்களுடன் மோதலுக்கு உள்ளாகின்றன.

பகல் நேரங்களில் இந்த மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி சண்டையிட்டுக் கொள்ளும்போது அந்தவழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீது மோதி வாகனங்களில் இருப்பவர்களை கீழே தள்ளிவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மாடுகளால் நெல்லையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட போதிலும், அவற்றின் உரிமையாளர்கள் அவற்றைத் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்து விடுகிறார்களே தவிர, கட்டி வைத்து வளர்ப்பதில்லை. 

மாடுகள்

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ’மாடுகளை அவற்றுக்கென உரிய இடத்தில் மட்டுமே கட்டிவைத்து வளர்க்க வேண்டும். ஆனால், அவை சாலைகளில் திரிகின்றன. இதைக் கவனிக்க வேண்டிய நெல்லை மாநகராட்சியும் கண்டுகொள்வதில்லை. அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சைக்கிள்களை மாடுகள் கீழே விழச் செய்யும்போது  பின்னால் வரக்கூடிய கனரக வாகனங்களால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து கூட இருக்கிறது.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்று அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் சாலைகள் பாதுகாப்பானதாக இருக்கும். குறிப்பாக நெல்லை-தூத்துக்குடி சாலையில் 50-க்கும் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. அவர் சாலையின் நடுவில் படுத்துக் கிடப்பதால் விபத்துக்கள் நடப்பதைக் கண்ட பின்னரும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை தருவதாக உள்ளது. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் விழித்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள் ஆதங்கத்துடன்.