வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (20/11/2017)

கடைசி தொடர்பு:09:45 (20/11/2017)

“90 லட்சம் இளைஞர்களின் நிலை என்ன” - டி.என்.பி.எஸ்.சிக்கு வேல்முருகன் கேள்வி

மிழகத்தில் அஞ்சல் துறை, ரயில்வே துறை என மத்திய அரசுப் பணிகளில், வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி வெளிமாநிலத்தவரும் எழுதலாம்' எனத் தேர்வாணையத்தின் விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றன!

டி என் பி எஸ் சி தேர்வு

இதுகுறித்து, ''கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழகம். பதவியை விட்டுப் போவதற்குள் பலாபலன்களை எல்லாம் பெருக்கிக்கொள்வதுதான் எடப்பாடி அரசின் திட்டமா'' என்று காட்டமாக கேள்விக்கணைத் தொடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்! அவரிடம் பேசினோம்...

''டி.என்.பி.எஸ்.சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் தமிழகத்துக்கு எந்தவகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறீர்கள்?''

“படித்து வேலையில்லாத தமிழக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்தும் பணியைத்தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதுநாள் வரை செய்துவந்தது. ஆனால், திடீரென கடந்த 7-11-2016 அன்று தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 'இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவரும், நேபாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாகிஸ்தான், திபெத் போன்ற நாட்டின் அகதிகளும்கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வினை எழுதலாம்' என்று தமிழரல்லாதோரையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது.

பாகிஸ்தான், திபெத் நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கெல்லாம் தமிழக அரசுப் பணிகளைப் பங்குபோடத் துடிக்கும் இந்த அரசு, நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் இங்கேயுள்ள 107 அகதி முகாம்களிலும் பன்றிக்குடிசையை விடவும் கேவலமான இடத்தில் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே... அவர்களுக்கு எந்தவித அரசு வேலை வாய்ப்பையும் வழங்கவில்லை. சொந்தமாக இரு சக்கர வாகனப் பதிவுகூட செய்யமுடியாத நிலையில்தான் அவர்களை வைத்திருக்கிறது. இப்படியொரு கேடுகெட்ட சூழலில், வெளிநாட்டில் இருப்பவரைக் கூட்டிவந்து இங்கே உள்ள அரசு வேலையைத் தூக்கிக் கொடுப்பீர்கள்... நாங்களும் மூடர்கூடமாக அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா?''

“வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு இங்கே மொழிப் பிரச்னை இருக்குமே...?''

“அந்தக் கொடுமையையும் சொல்கிறேன்....  தமிழகத்துக்கு வந்து தேர்வு எழுதுகிறவர்களுக்குத் தமிழ் தெரியாவிட்டாலும்கூட பரவாயில்லை தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று கூடுதல் சலுகையும் அளிக்கிறது இந்தத் திருத்தம். அதுமட்டுமா... தேர்வு எழுதிய பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் எனவும் வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்கிறது. இதன் பொருள், பொதுப்பட்டியலில் உள்ள 31 விழுக்காட்டுப் பணியிடங்களை தமிழரல்லாதோரும் கைப்பற்றிக்கொள்ளலாம் என்பதுதானே... அதோடு, இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய படுபாதகமான செயல்!

வேல்முருகன்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனாலும்கூட இன்னும்  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கணிசமானவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 90 லட்சம் இளைஞர்கள் படித்து முடித்தும் வேலையில்லாமல் சிரமப்பட்டுவருகின்றனர். அதனால்தான் துப்புரவுப் பணிக்கும், கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கும்கூட பி.இ., எம்.இ என உயர் படிப்பு படித்த மாணவர்களும் போட்டிபோடும் அவல நிலை இங்கே ஏற்பட்டுள்ளது. இந்தநிலையைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றமே தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இப்படி இந்த மண்ணின் மைந்தர்கள் ஒரு கோடி பேர் வேலையின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டினரும் வந்து இருக்கின்ற சொச்ச இடங்களையும் பறித்துக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு.

பதவியை விட்டுப் போவதற்குள் பலாபலன்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளை பழனிசாமி அரசு நிறைவேற்றி வருகிறது.''

“கடந்த 20 வருடங்களாகவே வெளிமாநிலத்தவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதும் நடைமுறை இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறதே...?”

“அப்படியிருந்தால், அதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவேண்டியதுதானே... ஏன் 7-11-2016 தேதியிட்ட வழிகாட்டு விதிமுறைகளின்கீழ், சாதி வாரியாகப் பட்டியலிட்டுக் காட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு முந்தையப் பட்டியலைக் காட்டவேண்டியதுதானே.  
குரூப் 1-ல் தொடங்கி குரூப் 4 வரை அனைத்துப் பதவிகளையும் தீர்மானிப்பது டி.என்.பி.எஸ்.சி-தான். இந்தப் பதவிகளுக்கான தேர்வுகளை எழுதி வெல்லமுடியாத அளவுக்கு தமிழக இளைஞர்கள் தகுதியில்லாதவர்களா. எந்த அடிப்படையில், வெளி மாநிலத்தவரையும் வெளி நாட்டினரையும் இங்கே கொண்டுவந்து இறக்குமதி செய்யப் பார்க்கிறீர்கள் ''

“இந்த விஷயத்தில், தமிழக அரசுக்கு உங்களது கோரிக்கைகள்தான் என்ன?''

“கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கு நூறு மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு என்று இருக்கும்போது, தமிழர்கள் நாங்கள் மட்டும் முட்டாள்களா. கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட சட்டம் இயற்றவேண்டும். அதன்படி அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் 90 விழுக்காடு பணிகளை தமிழர்களுக்கே வழங்கவேண்டும்''


டிரெண்டிங் @ விகடன்