‘அண்ணன் கை பட்டதுக்கு கூச்சப்பட்டேன். ஆனா இப்ப...?!” - திருநங்கைகளின் சோகம் #TransgendersDayofRemembarance | Transgender shares horrible story of her livelihood

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (20/11/2017)

கடைசி தொடர்பு:18:09 (20/11/2017)

‘அண்ணன் கை பட்டதுக்கு கூச்சப்பட்டேன். ஆனா இப்ப...?!” - திருநங்கைகளின் சோகம் #TransgendersDayofRemembarance

இரவு சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் கடற்கரையில் நண்பர்கள் சூழ அமர்ந்திருந்தேன். கடல் அலைகளை ரசித்துக் கொண்டும் நிலா வெளிச்சத்தில் குதூகலமாக சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தோம். அப்போது எங்கள் அருகில் ஒரு திருநங்கை வந்தார். 'ஏய் காசு கொடு' என்று அதட்டினார். 'அக்கா உங்க பேர் என்ன?' என்று என் தோழி கேட்க, 'ஹும்ம் இளவரசி' என்றார். 'உண்மையாவே இளவரசி மாதிரிதான் அக்கா இருக்கீங்க' என்ற என்னைப் பார்த்த அவருடைய முகம் வாடிப்போய் இருந்தது.

'சாரி கண்ணு, என் பேர் ரீட்டா. நிறைய பசங்க என் பெயரை கேட்டு நக்கல் பண்ணுவாங்க. அதனால யாருகிட்டேயும் என்னோட உண்மையான பெயரை சொல்ல மாட்டேன்'' என்றவரிடம் ''உட்காருங்க அக்கா, கொஞ்ச நேரம் பேசலாம்'' என்றேன். சுற்றும்முற்றும் பார்த்தவர் கொஞ்சம் தயங்க, ''அட உட்காருங்க அக்கா. எப்பவும் உங்க உடலை வருத்திக்கிட்டே இருக்கீங்க. கொஞ்சமாவது ஃப்ரீயா பேசுங்க'' என்றவுடன் ஏதோ யோசித்தவராக சரி என்று அமர்ந்தார். பீச்சில் விற்ற மாங்காய் சுண்டலை இருவருக்கும் ஒரு பொட்டலம் என்று வாங்கிக்கொண்டு பேச ஆர்மபித்தோம். 

திருநங்கை

“வாழ்க்கையில முதல் தடவையா இந்த பீச்ல ஒரு பொண்ணு பக்கத்துல உட்காருறேன்'' என்றவர் அத்தனை எளிதாக பேசிவிடவில்லை. நான் என்னைப் பற்றி இயல்பாக சொல்லிமுடித்தேன். கடலை வெறிக்கப் பார்த்தபடி சுண்டல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பிறகு, அவராக பேச ஆரம்பித்தார்.  ''என் சொந்த ஊர் சேலம். எங்க வீட்டுல நானும், என் அண்ணனும் மட்டும்தான். அப்பா கூலி வேலை பார்த்துட்டு இருந்தாரு. நான் நல்லா படிப்பேன். வீட்டுல நானும், எங்க அண்ணனும் ஒரே கட்டில்லதான் படுத்து தூங்குவோம். நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தப்ப அவன் பக்கத்துல என்னால படுக்க முடியல. அவன் கை என்மேல பட்டாலே உடம்பெல்லாம் கூச ஆரம்பிச்சது.

பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக ஈடுபாடு வர ஆரம்பிச்சது. அப்போதான் நான் திருநங்கையா மாறிட்டேனு தெரிஞ்சது. வீட்டுக்குத் தெரியாம ரெண்டு மாசம்தான் என்னால நடிக்க முடிஞ்சது. அவங்களுக்கு என்னைப் பற்றி தெரிஞ்சதும் செருப்பால அடிச்சு வீட்டைவிட்டு துரத்திட்டாங்க. பதினைந்து வயசுல வீட்டைவிட்டு வெளிய வந்து எங்க போகுறதுன்னுகூட தெரியாம ரோட்டுல சுத்திட்டு இருந்தேன். அப்போ பாலியல் தொழில் பண்ணின ஒரு அக்கா என்னை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சாங்க. அவங்கதான் எனக்கு ஆப்ரேஷன் செய்றதுக்கு உதவியா இருந்தாங்க. 'ஆப்ரேஷன் பண்றவரைக்கும் இந்த தொழிலுக்கு நீ வரவேண்டாம்'னு சொல்லி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க.

 நல்லா படிக்கணும் பெரிய ஆளா வரணும்னு நினைச்ச என்னோட கனவெல்லாம் கலைச்சிட்டு, இந்த சமூகம் எங்களுக்குனு கொடுத்த வாழ்க்கையை வாழ முடிவு பண்ணேன். கடை கடையா காசு வாங்கி ஆப்ரேசனுக்கு பணம் சேர்த்து வைச்சேன். கடன் வாங்கி பதினெட்டு வயசுல ஆப்ரேசன் பண்ணிகிட்டேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு'' என்றவரின் வார்த்தைகளில் உணர்ச்சியே இல்லை.

''என்னுடைய கடனை அடைக்குறதுக்கும், பசியை போக்குறதுக்கும் பாலியல் தொழில் செய்றதை தவிர வேற வழி இல்லைன்னு புரிஞ்சது. என்னுடைய வளர்ப்பு அம்மா ஒரு ஏஜென்ட்கிட்ட என்னை விட்டுடாங்க. ஆப்ரேசன் பண்ணி முதன்முதலா பாலியல் தொழில்ல ஈடுபட்டேன். பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு ஒருத்தரைதான் அனுப்புனாங்க. இப்போ கணக்கே இல்லாம அனுப்புறாங்க. கூடப் பொறந்த அண்ணன் கை என் மேல பட்டதுக்கே கூச்சப்பட்டநான் இப்போ...

திருநங்கை

இந்த பீச்க்கு பக்கத்துலதான் நாங்க பாலியல் தொழில்ல ஈடுபடுவோம். ஒவ்வொருத்தரா அனுப்பி வைப்பாங்க. அதுல ஒருசிலர் காசு கொடுக்காம, 'உங்க ஏஜென்ட்தான் அனுப்புனாங்க'னு பொய் சொல்லிட்டு ஓடிடுவாங்க. தொடர்ந்து பத்துபேர் வர்றப்ப வலியால துடிச்சிருக்கேன். என்கிட்ட ஏன் இந்த தொழில் பார்க்குறீங்கனு கேட்டா கோவமா வரும். வேற என்ன பண்ண சொல்ற சொல்லு... நல்ல வேலை கொடுத்திருவாங்களா இந்த சமூகத்துல?'' என்று தன் கோபத்தை கேள்விகளாக வெளிப்படுத்தினார். 

“பீச்ல உங்களை மாதிரி ஆட்கள்கிட்ட காசு வாங்கிதான் ஆப்ரேசன் பண்ண உறுப்புக்கு மருந்து வாங்குவேன். சிலசமயம் ஆப்ரேஷன் பண்ணின இடத்துலேருந்து கெட்ட நாத்தம் வரும். அப்போலாம் செத்துப்போயிடலாமானு நினைச்சிருக்கேன். ஆனா பசி இருக்கே... அது மனுசனை வாழவும்விடாது... சாகவும் விடாது. என்னோட அப்பா, அம்மா மட்டும் என்னை ஏத்துட்டு இருந்தாங்கனா நான் இப்போ கல்லூரி முடிச்சி நல்ல வேலையில இருந்திருப்பேன்'' என்றவரை ''நீங்க விரும்பினா உங்களை நல்ல காப்பகத்துல சேர்த்து விடுறேன்'' என்றேன்.

''எத்தனை பேரை காப்பகத்துல சேர்த்துவிடுவ சொல்லு? எங்களை காப்பகத்துல எல்லாம் நல்லா வைச்சுக்க மாட்டாங்க கண்ணு. எனக்கு என்னிக்கு விமோசனம் கிடைக்கப்போகுதுன்னு தெரியலை. சரி நேரமாச்சு. ஏஜென்ட் கத்துவான். நான் வாரேன்'' என்றவரிடம் ''உங்க நம்பர் இருந்தா சொல்லுங்கக்கா'' என்றேன். என்னைப் பார்த்து விரக்தியாக சிரித்தபடி கடந்து போனார் ரீட்டா.

பீச்சில் ஒவ்வொரு முறையும் என் முன்னால் கையேந்தும் திருநங்கைகளைப் பார்த்து எரிச்சல்பட்டிருக்கிறேன். ஆனால் நிச்சயமாக இனி அப்படி நடந்துகொள்ளப்போவதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்