வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (20/11/2017)

கடைசி தொடர்பு:13:40 (20/11/2017)

ஆறு ஆண்டுகளுக்குப் பின் கலைஞர்களுக்கு கிடைத்த கலை விருதுகள்!

தேனி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பாக, மாவட்ட கலை மன்றம் வழியாக வழங்கப்படும் கலை விருதுகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. 2010 முதல் 2016-ம் ஆண்டு காலம் வரையிலான கலை விருதுகளுக்காக தேனி மாவட்டத்தில் இருந்து கலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதித்த சுமார் 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கலைஞர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பொற்கிழி வழங்கினார். மென்மேலும் சாதனைகள் பல புரியவேண்டும் என வாழ்த்தினார்.

விருது பெற்ற காய்கனி சிற்பக்கலைஞர் மு.இளஞ்செழியனிடம் பேசினோம். "தேனி மாவட்டத்தின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் எனக்கு கலை வளர் மணி என்ற விருது கொடுத்திருக்கிறார்கள். கடந்த 14 வருடங்களாக காய்கனி சிற்பக்கலையில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். மாநில, தேசிய, சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பல வாங்கியிருக்கிறேன். தைவானில் நடந்த காய்கனி சிற்பக்கலைப் போட்டியில் முதல் பரிசு பெற்று அந்நாட்டின் பாராட்டையும் பெற்றேன். இப்படி பல இடங்களில் என்னையும், என் கலையையும் அங்கீகரித்தாலும் என் சொந்த மாவட்டத்தில் கிடைக்கும் அங்கீகாரத்துக்கு ஈடுஇணை கிடையாது. ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்றார் புன்னகையோடு.

இதுபோன்ற விருதுகள்தான் கலைஞர்களுக்கான டானிக். கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்களை ஊக்கப்படுத்துவது அரசின் கடமை. இதனால் கலையும், கலைஞர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆண்டு தோறும் தேனி மாவட்டத்தில் உள்ள கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இதுபோன்ற விருதுகள் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கலைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.