தென்னாப்பிரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி வீட்டில் கொள்ளை!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வசித்துவரும் இந்தியத் தூதரக அதிகாரி வீட்டில் புகுந்தக் கொள்ளையர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தூதர்


தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தியத் தூதரக அலுவலகம் உள்ளது. அங்கு அதிகாரியாக பணியாற்றுபவர் ஷஷாங் விக்ரம். இவர் இன்னோஸ் சாலையில் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வீட்டில் வசித்துவருகிறார். சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்குள்  ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் உள்ளே இருந்தவர்களை மிரட்டி பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஷஷாங் மனோகரையும் அவருடைய 5 வயது மகனையும் அந்தக் கும்பல் சிறிது நேரம் பிணைக்கைதியாக பிடித்துவைத்துள்ளது. ஒரு ஆசிரியை, பணியாளர்கள், 10 வயது சிறுவன் ஆகியோரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் இல்லையென்றாலும், தூதரக அதிகாரி வீட்டிலேயே கொள்ளை நடந்தது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை தென்னாப்பிரிக்க அரசின் கவனத்துக்கு இந்திய அரசு கொண்டுசென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய அதிகாரிகளுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க போலீஸார் கொள்ளைகுறித்து விசாரித்துவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!