வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (20/11/2017)

கடைசி தொடர்பு:15:55 (13/07/2018)

விவசாயிகளை மேம்படுத்தினால்தான் மாநிலம் முழுமையான வளர்ச்சி அடையும்! தம்பிதுரை பேச்சு

"மாற்றுத்திறனாளிகள்மீது அக்கறை கொண்ட தமிழக அரசு 2011 முதல் 31.10.2017 வரை 235 நபர்களுக்கு 1.08 கோடி கடன் வழங்கி உதவி இருக்கிறது" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கரூரில் நடைபெற்ற 64-வது கூட்டுறவு வார விழாவில் 258 பயனாளிகளுக்கு ரூ.107 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் வழங்கினார்கள். கரூர் மாவட்டம், வடிவேல் நகர் பி.எஸ்.ஆர் மஹாலில் நடைபெற்ற 64-வது கூட்டுறவு வார விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ்  தலைமையில் 171 தனிநபர்களுக்கும், 87 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கும் என 258 பயனாளிகளுக்கு ரூ.106.72 லட்சம் மதிப்பிலான மத்திய காலக்கடன்களை வழங்கினார்.

இவ்விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில்,  "மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குத் திட்டம்-2023
திட்டத்தின் மூலம் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்திவந்தார்கள். அதனடிப்படையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அதன்படி, கரூர் மாவட்டத்தை 27,939 விவசாயிகளுக்கு ரூ.129.28 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக 38,664 விவசாயிகளுக்கு ரூ.17.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை மேம்படுத்தினால்தான் அம்மாநிலம் முழுமையான வளர்ச்சி அடையும் என்ற நோக்கத்தில் கடந்த 6 ஆண்டு காலம் 31.03.2017 வரை கரூர் மாவட்டத்தில் 1,31,434 விவசாயிகளுக்கு ரூ.743.80 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2017-2018-ம் ஆண்டில் 31.10.2017 வரை 8,858 விவசாயிகளுக்கு ரூ.65.10 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் பயிர்க்கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள 73,006 விவசாயிகளுக்கு ரூ.29.18 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டில் தனி அக்கறைகொண்ட இந்த அரசு 2011 முதல் 31.10.2017 வரை 235 நபர்களுக்கு ரூ.1.08 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு துறையின் வாயிலாக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. அதில் கூட்டுறவுத் துறை மூலம் மட்டும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், தனிநபர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் போன்றோர் இத்திட்டங்களைப் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.