இரண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு ஜி.எஸ்.டி வரியை ஆய்வுசெய்த பின் கமல்ஹாசனைக் கிண்டலடித்த தமிழிசை!

சென்னையில் உள்ள ஹோட்டலில் இரண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு பில் செலுத்திய பின்னர் ஜி.எஸ்.டி வரியை ஆய்வுசெய்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகர் கமல்ஹாசனைக் கிண்டலடித்தார். 

அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் அண்மையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி தொடர்பான ஆய்வு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 177 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு கடந்த 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆனால், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் இந்த வரியை குறைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு கட்சி நிர்வாகிகளுடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்றார். அப்போது, இரண்டு இட்லி, ஒரு வடை ஆகியவற்றை அவர் சாப்பிட்டார். அவர்களுடன் கட்சி நிர்வாகிகளும் சாப்பிட்டனர். சாப்பிட்டப்பிறகு காபி குடித்த தமிழிசை பின்னர் பில் பெற்றுக்கொண்டார். அதில் ஜி.எஸ்.டி வரியை ஆய்வுசெய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஜி.எஸ்.டி வரியைக் குறைத்தபின் உணவகங்கள் உணவு விலையைக் குறைக்க வேண்டும். உணவுப்பொருள் விலை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பல உணவகங்களில் ஜி.எஸ்.டி வரியைக் குறைக்காமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் வருமானவரித்துறை சோதனைகுறித்து, கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகுறித்து கேள்வி எழுப்பினர். இதற்குப்பதில் அளித்த தமிழிசை, கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளைப் படிக்க கோனார் தமிழ் உரை தேவைப்படுகிறது" என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!