போயஸ் கார்டன் லேப்டாப், பென்டிரைவ் ரகசியங்கள் - ஐ.டி-யின் அடுத்த சீக்ரெட் ஆபரேஷன்

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் சோதனையில் சிக்கிய லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றில் உள்ள விவரங்களைப் பார்த்த ஐ.டி அதிகாரிகள், அடுத்த சீக்ரெட் ஆபரேஷனுக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையின்போது, லேப்டாப் மற்றும் பென்டிரைவ்கள் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை கடந்த சில தினங்களாக ஆய்வுசெய்த அதிகாரிகளுக்கு, சில முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு பென்டிரைவ்வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த சினிமா பாடல்கள் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லேப் டாப்பைத் திறக்க முடியாமல் திணறிய ஐ.டி துறையினர், ஹேக்கர் மூலம் அதை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு திறந்து, அதில் உள்ள தகவல்களைச் சேகரித்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.டி துறை அதிகாரிகள், "சசிகலா குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கிடைத்த லேப்டாப், பென்டிரைவ் ஆகியவற்றை ஓப்பன் செய்தோம். அதில், எங்களுக்கு சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில், அடுத்தகட்ட சீக்ரெட் ஆபரேஷனுக்கு அதிகாரிகள் தயாராகிவருகின்றனர். சிறையிலிருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். எங்களின் விசாரணைக்கு சசிகலா குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்னும் சிலரிடம் விசாரணை நடத்தவிருக்கிறோம்.

போயஸ் கார்டன்

சசிகலா குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. அவர்களின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. விரைவில் அவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தவுள்ளோம். இதற்கிடையில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பினாமி சொத்துகள்குறித்த முழுத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பான ஆவணங்கள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்களின் விசாரணைகுறித்த தகவல்கள் தினமும் டெல்லிக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுவருகிறது. மேலும், விசாரிக்கப்படும் மன்னார்குடி குடும்ப உறவுகளின் வாக்குமூலங்கள் வீடியோவாகவும் பதிவுசெய்யப்படுகிறது. இதனால், எங்களிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்த சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீடு, அலுவலகங்களிலிருந்து கிடைத்த ஆவணங்கள் தொடர்பான தகவல்கள், போயஸ் கார்டனுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், அதற்கான ஆதாரங்களும் எங்களுக்குக் கிடைத்தன. அதன்பேரில், போயஸ் கார்டனில் சோதனை செய்தோம். சசிகலா, பூங்குன்றன் அறைகளில் கிடைத்த லேப்டாப், பென்டிரைவ் ஆகியவற்றை ஆராய்ந்தோம். பாஸ்வேர்டுகள் இல்லாததால் உடனடியாக லேப்டாப்பை ஓப்பன் செய்ய முடியவில்லை. அதன்பிறகு, தொழில்நுட்ப டீம் உதவியுடன் லேப் டாப்பை ஓப்பன் செய்தோம். அதில், எங்களுக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் கிடைத்தன. மேலும், பென் டிரைவ்களிலும் சில விவரங்கள் உள்ளன. ஒரே ஒரு பென்டிரைவ்வில் மட்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த படங்களின் பாடல்கள் இருந்தன. எங்களுக்குக் கிடைத்த தகவல்கள், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதன்அடிப்படையில், மன்னார்குடி உறவுகளில் முக்கியமானவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!