வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (20/11/2017)

கடைசி தொடர்பு:17:30 (20/11/2017)

ஜாமீனில் வந்த அடுத்த நிமிடமே நடந்த இரட்டைக்கொலை! தூத்துக்குடியில் பகீர்

double murder in thoothukudi

தூத்துக்குடியில் தேர்தல் முன்விரோதத்தில் ஏற்பட்ட பகையால் பழிக்குப்பழியாக இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள புதூர் பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் புதூர் பாண்டியாபுரத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஆவார். கடந்த ஜனவரி 24-ம் தேதி இரவில் புதூர் பாண்டியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பிள்ளையார்கோயில் பின்புறமுள்ள லாரி செட்டில் அவரின் நண்பர் முத்துக்குமார் என்பவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் முனியசாமியையும் முத்துக்குமாரையும் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடினர்.  

புதூர் பாண்டியாபுரம் பஞ்சாயத்தின் தலைவராகத் தொடர்ந்து 3 முறை பதவியில் இருந்த முனியசாமி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில்  பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முனியசாமியின் மனைவி மஞ்சுளாவும் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பாக்கியலெட்சுமியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் பதவியைத் தன் மனைவி பாக்கியலெட்சுமிக்கு விட்டுத்தரும்படி ராமச்சந்திரன், முனியசாமியிடம் பலமுறை கேட்டும் முனியசாமி மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவருக்குள் தொடங்கிய பகையால் இந்த இரட்டைக் கொலை நடந்ததாக புதியம்புத்தூர் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக இதே ஊரைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

double murder in thoothukudi

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் கொடிக்காட்டுராஜா, கணேசன் ஆகிய இருவரும் இன்று காலை நிபந்தனை ஜாமீன் பெற்று காரில் புதூர்பாண்டியாபுரத்துக்கு வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் காரில் புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகில் வந்துகொண்டிருக்கும்போது, இவர்களது காரை வழி மறித்த கும்பல் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். உடனே, காரிலிருந்த 6 பேரும் இறங்கி ஓடினர். இதில், அக்கும்பல் கொடிக்காட்டு ராஜா, கணேசன் ஆகிய இருவரையும்  துரத்தி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதில் ஒருவரது தலையைத் தனியாக வெட்டி முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். இரண்டு பைக்கில் வந்த அக்கும்பல், பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர். வெட்டுப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டு பைக்கையும்  தீ வைத்துக் கொளுத்தினர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதத்தால்  பழிக்குப்பழியாக நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க