இரண்டு மாநில போலீஸை தெறிக்கவிட்ட கொலையாளிகள்! - அதிர்ந்த புதுச்சேரி - கடலூர் சாலை | Murderers gang escaped in car - Puducherry police chased in cinematic style

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (20/11/2017)

இரண்டு மாநில போலீஸை தெறிக்கவிட்ட கொலையாளிகள்! - அதிர்ந்த புதுச்சேரி - கடலூர் சாலை

புதுச்சேரியில் கொலை செய்துவிட்டு, சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தித் தப்பிச்சென்ற கும்பலை, சினிமா பாணியில் விரட்டிப் பிடித்திருக்கின்றனர் போலீஸார்.

புதுச்சேரி

புதுச்சேரியில், சமீபகாலமாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர் கதையாகிவருகின்றன. கடந்த தீபாவளியன்று மேட்டுப்பாளையத்தில், தொழில்போட்டி காரணமாக ஒரே இடத்தில் மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர். முதலியார்பேட்டையில் நடந்த ரவுடி சின்னசெல்வம் கொலை போன்ற சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று காலையில் நடந்த கொலைச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன், புதுச்சேரியில் தங்கி நெய் வியாபாரம் செய்துவருபவர். இன்று காலை, டிபன் வாங்கிக்கொண்டு புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் துணிக்கடைக்குப் பின்புறம் உள்ள சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

புதுச்சேரி

அப்போது, தமிழகப் பதிவெண்கொண்ட காரில் வந்த ஒரு மர்மக் கும்பல், கொளஞ்சியப்பனின் வாகனத்தை மோதியது. அதில், நிலைதடுமாறிக்  கீழே விழுந்த கொளஞ்சியப்பனை, காரில் வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அதன்பிறகு, அதே காரில்  தப்பிச்சென்றுவிட்டது. அந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்து வந்த ஒதியஞ்சாலை போலீஸார், கொளஞ்சியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகள், கடலூர் சாலையில் தப்பிச்செல்வது தெரியவந்ததும் அவர்களின் காரைத் துரத்திச் சென்றது போலீஸ். அப்போது, சினிமா காட்சிகளைப்போல வழி நெடுகிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்களை இடித்து விபத்தை ஏற்படுத்திவிட்டுச்சென்றது அந்த கார். இந்த விபத்தில், பொதுமக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. புதுச்சேரி போலீஸும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். அதனால், புதுச்சேரி-கடலூர் சாலை முழுவதிலும் பதற்றம் நிலவியது. குற்றவாளிகள் தப்பிச் செல்லும் தகவல் போலீஸ் வாக்கி டாக்கிமூலம் புதுச்சேரி மற்றும் தமிழகப் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டதால்,புதுச்சேரி-கடலூர் எல்லைப் பகுதியான முள்ளோடையிலும் கடலூர் நகருக்குள் நுழையும் ஆல்பேட்டை செக்போஸ்டிலும் பேரிகார்டுகளை வைத்தனர்.

புதுச்சேரி

கடலூருக்குள் நுழைந்த அந்த மர்மக் கும்பலின் கார், அங்கும் ஏகப்பட்ட விபத்துகளை ஏற்படுத்திவிட்டு கடற்கரைச் சாலையில் சீறிப் பாய்ந்தது. புதுச்சேரி போலீஸும் தமிழகப் போலீஸும் அவர்களை விடாமல் துரத்திச்சென்றனர். பீச் பகுதியிலிருந்து திரும்பி, அண்ணா மேம்பாலத்தில் வந்த கார், உழவர் சந்தைக்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றுவிட்டது. உடனே அந்த மர்மக் கும்பலை வளைத்துப்பிடித்த பொதுமக்கள், விபத்துக்களை ஏற்படுத்தியதற்காக போலீஸையும் மீறி கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு, பொதுமக்களிடமிருந்து அந்தக் கும்பலை மீட்ட போலீஸார், அவர்களைக் கைதுசெய்து, புதுச்சேரி அழைத்துவந்து விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர். காரில் வந்த 5 பேரில் மூன்று பேர் பிடிபட்ட நிலையில் இருவர் தப்பியதும், கொலைசெய்யப்பட்ட கொளஞ்சியப்பன்மீது தமிழகத்தில் 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close