வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (20/11/2017)

கடைசி தொடர்பு:12:22 (21/11/2017)

''தமிழகத்தில் நடப்பது ஆளுநர் ஆட்சிதான்!'' - டி.ராஜா

ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 'நவம்பர் சோசலிச புரட்சியின் நூற்றாண்டு நிறைவுவிழா' பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கட்சியின் மூத்தத் தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இக்கூட்டத்தின் நிறைவுவிழாவில் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியாவின் கூட்டாட்சி நெறிமுறை மற்றும் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டே ஒரு மாநிலத்தின் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் சமீபத்திய செயல்பாடுகள் மிகவும் கேள்விக்குறியாகி இருக்கின்றன. மாநில அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடுவது, மாநிலத்தின் உரிமைகளை மீறும் செயலாகும். தமிழகத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே தற்போது ஆளுநர் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு ஒரு மோதல் நிலை உருவாகி இருக்கிறது. அதேபோன்றதொரு நிலைமை தமிழ்நாட்டில் உருவாகாது என யாரும் கருதிவிடக் கூடாது.

சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தவறாகக் கருதவில்லை. அதேசமயம், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் உள்ளிட்டோர் இல்லங்களில் நடைபெற்ற சோதனைகளைப் பற்றியும், அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் தமிழக மக்களுக்கு தெரிவிக்கவில்லை. அதேபோல, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் நடைபெற்ற சோதனைகளைப் பற்றியும் நமக்குத் தெரியப்போவது இல்லை.

இன்றைய அ.தி.மு.க அரசு மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. மாநில நலன்களைக் காப்பாற்றத் தவறிய ஒரு அரசாக இருக்கிறது. இத்தகைய ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து விரைவில் ஒரு அரசியல் இயக்கத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம். தமிழகத்தின் நலனில் அக்கறைகொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. தொழில்துறை, விவசாயத்துறை உள்பட பல்வேறு துறைகள் நெருக்கடியில் இருக்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி நடைமுறையின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை உருவாகி இருக்கிறது. மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கின்றன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பி.ஜே.பி அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டன. அதைப்பற்றிக் கேள்வி கேட்டால், பனாமா ஆவணங்களும், பேரடைஸ் ஆவணங்களும் கொடுக்கப்படுமே தவிர, கறுப்புப் பணத்தை மீட்பதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழ்நிலையில்தான், வரவிருக்கும் குஜராத் தேர்தல் பி.ஜே.பி-யைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் காரணமாகவே மோடி, அமித்ஷா என பி.ஜே.பி-யின் அனைத்துத் தலைவர்களும் குஜராத்தில் மையம் கொண்டுள்ளனர். எப்படியாவது குஜராத் மாநிலத்தை தங்களிடம் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் பி.ஜே.பி குறியாக இருக்கிறது. அதற்காகவே, மற்றக் கட்சிகளுக்கு எதிராகக் கேவலமான முறையில் பிரசாரம் செய்துவருகிறார்கள். அதேபோல குஜராத் தேர்தலை முன்வைத்தே நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இப்படிக் குளிர்காலக் கூட்டத்தொடரின் நாள்களைக் குறைத்துக்கொண்டே இருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்