கந்துவட்டி ஹெல்ப் லைன் சேவை! இதுவரை 127 புகார்கள் பதிவு | From usury helpline, 127 complaints registered so far

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (20/11/2017)

கடைசி தொடர்பு:19:15 (20/11/2017)

கந்துவட்டி ஹெல்ப் லைன் சேவை! இதுவரை 127 புகார்கள் பதிவு

நெல்லை மாவட்டத்தில், கந்துவட்டி தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க தொடங்கப்பட்ட ஹெல்ப் லைன் சேவைமூலம் இதுரை 127 புகார்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஆட்சியர் அலுவலகம்

கந்துவட்டிக் கொடுமையால், இசக்கிமுத்து தன் மனைவி குழந்தைகளுடன் தீக்கிரையாகிப் பலியானதைத் தொடர்ந்து, கந்துவட்டி தொடர்பாகப் புகார் அளிக்க ஹெல்ப் லைன் தொடங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டால், அக்டோபர் 24-ம் தேதி இந்த ஹெல்ப் லைன் சேவை தொடங்கப்பட்டது. கந்துவட்டி பாதிப்புக்கு உள்ளானவர்கள், தொலைபேசி வாயிலாகவே இந்த மையத்தில் புகார் அளிக்க முடியும்.

அதன்படி, இந்த ஹெல்ப் லைன் சேவை தொடங்கப்பட்டதும், தினமும் நிறையப் புகார்கள் வந்தன. இதுபற்றிய தகவல்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பரவியதால், வெளி மாவட்டங்களில் இருந்தும் நிறைய பேர் புகார் அளிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில், இந்தத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி 127 பேர் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இது தவிர, நெல்லை மாவட்டக் காவல்துறை சார்பாக, மாவட்டம் முழுவதும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதிலிருந்து 100 பேர் கந்துவட்டி கொடுப்பவர்கள் என்று கண்டறியப்பட்டு, அவர்களை போலீஸார் கண்காணித்துவந்தனர். இந்த நிலையில், ஹெல்ப் லைன் மூலமாகப் புகார் வந்தது தொடர்பாக, மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.  

ஹெல்ப் லைன் சேவை மூலமாக கடையநல்லூர் பகுதியிலிருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளன. அங்கிருந்து மட்டும் 16 புகார்களும் ராதாபுரம் தாலுகாவிலிருந்து 15 புகார்களும் அம்பாசமுத்திரம் தாலுகாவிலிருந்து 14 புகார்களும் பெறப்பட்டுள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தலா 10-க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய ஆதாரம் இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்குப் பரிந்துரைசெய்யப்படுகிறது. அதனால், நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டித் தொல்லைகள் தற்போது குறையத் தொடங்கியிருக்கின்றன.