தி.மலை விவசாயிக்கு நீதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கிய விவசாயிகள்

'திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு விவசாயியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த வங்கி மேலாளர் மற்றும் அவரின் அடியாட்களை உடனே கைது செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுக்க வேண்டும்' என்று தமிழக விவசாயிகள் சங்கம் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இதுபற்றி மாவட்ட தலைவர் பழனிசாமி, '' தண்டராம்பட்டு போந்தை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன், அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக கடன் பெற்று, கடனை திருப்பிச் செலுத்திவந்தநிலையில், 1.5 லட்சம் பாக்கி இருந்துள்ளது. வங்கி மேலாளர்  அதைக் கட்ட வலியுறுத்தி நெருக்கடிகொடுத்துவந்தார்.

விவசாயி, தன்னுடைய சக்கரை ஆலையிலிருந்து 3,50,000 வர வேண்டியுள்ளது, அந்தப் பணம் வந்தவுடன் தங்கள் பாக்கியைச் செலுத்திவிடுவதாகக் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளாத வங்கி மேலாளர், அடியாட்களுடன் விவசாயி வீட்டுக்கு வந்து பணத்தை கட்டச்சொல்லி மிரட்டி அடித்ததால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துவிட்டார்.

ஞானசேகரனை தாக்கிய அடியாட்கள் மற்றும் வங்கி மேலாளர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, அவர்களைக் கைதுசெய்ய வேண்டும். என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியதை அடுத்து, திருவண்ணாமலை கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஒத்துக் கொண்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அடியாட்களையும், வங்கி மேலாளரையும் உடனே கைதுசெய்வதோடு,2005ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லட்சுமணன் கொடுத்த தீர்ப்பின்படி வங்கியில் முகவர்கள் என்ற பெயரில் இருக்கும் குண்டர்களை அப்புறப்படுத்த வேண்டும். முகவர் என்ற பதவியே இருக்ககூடாது என்றார். ஆனால், தமிழகத்தில் உள்ள பல வங்கிகளில், முகவர் என்ற பெயரில் குண்டர்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுகிறார்கள். முகவர்களை வைத்திருக்கும் வங்கிகள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!