பிரதமரிடம் ஓ.பி.எஸ் எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை! - அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்

துணை முதல்வராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அந்தச் சந்திப்பு பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி அணி ஒன்று சேர்ந்த சமயம் அது. இரு அணிகள் ஒன்றிணைந்திருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அணி பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டப்படுவதாகப் பேச்சு அடிபட்டது. இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறித்து புகார் தெரிவிக்கவே பன்னீர்செல்வம் பிரதமரைப் பார்க்கச் சென்றதாகவும் அரசியல் வட்டாரங்கள் யூகித்தன. ஆனால், இவை அனைத்தையும் பன்னீர்செல்வம் மறுத்தார்.

ops

”பிரதமர் மோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. தமிழகத்தின் உள்நாட்டு மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி பெறுவதற்காகவே கோரிக்கை மனு அளித்தேன். மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வழங்க ஏற்பாடு செய்வதாகப் பிரதமர் உறுதியளித்தார்” என்று பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில்தான் இருந்தார். ஆனால், பன்னீர்செல்வம் அவரை அழைத்துச் செல்லாமல் மைத்ரேயனை அழைத்துச் சென்றது ஏன். தங்கமணி எடப்பாடி அணியைச் சேர்ந்தவர் என்பதாலா. இப்படி பல கேள்விகளை செய்தியாளர்கள் பன்னீர்செல்வத்திடம் கேட்டனர். ஆனால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். பன்னீர்செல்வம் பிரதமரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் கோரிக்கை மனு தெளிவாகவே இல்லை. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதுபற்றி விகடனில் அக்டோபர் 13-ம் தேதி  ”இதைத்தான் விரும்புகிறீர்களா பன்னீர்செல்வம் அவர்களே! - மோடி சந்திப்பின் சந்தேகங்கள்” என்னும் தலைப்பில் கட்டுரை வெளியானது.

ops

ஓ.பி.எஸ் மோடியிடம் கொடுத்ததாகக் கூறப்படும் கோரிக்கை மனுவின் நகல்
 

இந்நிலையில் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் கொடுத்த கோரிக்கை மனு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியெழுப்பப்ப ட்டது. அன்றையத் தினத்தில் (12.10.17) மனு ஏதும் பெறப்படவேயில்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. பன்னீர்செல்வம் பிரதமரிடம் மின் தேவை குறித்து எந்தக் கடிதமும் தரவில்லை என்றால் அந்தச் சந்திப்பு எதற்காக. மோடியைச் சந்தித்துவிட்டு வந்த பன்னீர்செல்வம் அன்று செய்தியாளர் மத்தியில் வெளியிட்டக் கோரிக்கை மனு பிரதமரிடம் கொடுக்கப்படவேயில்லை என்றால் எதற்காகத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அப்படி ஓர் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட வேண்டும். ஆர்.டி.ஐ கேள்வியும் பிரதமர் அலுவலகம் அளித்த பதிலும் கீழே...

விகடன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!