கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்! | Kudankulam Nuclear power project unit 2 has started power production today

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (20/11/2017)

கடைசி தொடர்பு:21:15 (20/11/2017)

கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டதால், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியதாக அணுஉலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணு உலை

கூடங்குளத்தில், தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு உலைகளும் செயல்பட்டுவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, இரண்டாவது அணுஉலையின் டர்பைனில் பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு, அணுஉலையைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த 4 மாத காலமாக நடந்த பணிகள் நிறைவடைந்ததால், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநரான எஸ்.வி.ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கூடங்குளம் 2-வது அணுஉலையின் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வதற்க்காக, ஆகஸ்ட் 4-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்தப் பழுது சரிசெய்யப்பட்டதால், இன்று 1.25 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அணுஉலையில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு நவம்பர் 16-ம் தேதி காலை 9.05 மணிக்கு, அணுப்பிளவு தொடர் வினை தொடங்கப்பட்டது. 

அதன் பின்னர், அணுஉலையின் பணிகள் பல்வேறு சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டன. அதில், சாதகமான நிலை உருவானதால், இன்று மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு, பவர் கிரீட் எனப்படும் தென்மண்டல பகிர்மானக் கழகத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது. கூடங்குளம் முதல் அணு உலையிலிருந்து தற்போது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டுவருகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இரண்டாவது அணுஉலையிலிருந்து 180 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் படிப்படியாக மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அணுஉலையில், அடுத்த ஒரு வார காலத்துக்குள் முழு மின்உற்பத்தி அளவான 1000 மெகாவாட் அளவை எட்டும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.