"பள்ளி அருகே உள்ள மீன் மார்க்கெட்டை மாற்றுங்கள்!": கொந்தளிக்கும் மாணவர்கள் | student's plea to shift the fish market which is nearer to school

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (20/11/2017)

கடைசி தொடர்பு:21:45 (20/11/2017)

"பள்ளி அருகே உள்ள மீன் மார்க்கெட்டை மாற்றுங்கள்!": கொந்தளிக்கும் மாணவர்கள்

 

 

"எங்கள் பள்ளிக்கு அருகே உள்ள மீன் சந்தையிலிருந்து மீன் கழிவுகளின் துர்நாற்றம் வீசுவதால், பள்ளிக்கு வரும் எங்களுக்கு வாந்தி மற்றும் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் வருகிறது. அதனால், அந்த மீன் சந்தையை அகற்றுங்கள்" என்று மாணவர்கள் திரளாக வந்து கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கரூர் மாவட்டம், புதுக்குளத்துப்பாளையம் வெங்கமேடு பகுதியில் இருக்கிறது, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியின் அருகில் இயங்கிவரும் மீன் சந்தையால்தான், தங்களுக்கு பல விதமான நோய்கள் பரவுவதாக ஊர் பொதுமக்களோடு வந்த பள்ளி மாணவர்கள், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜிடம் புகார் மனுவை அளித்தனர். அந்த புகார் மனுவில், "எங்கள் பள்ளி அருகே இயங்கிவரும் மீன் சந்தையால் வாந்தி மற்றும் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன. இதனால், நாங்கள் கடுமையாக பாதிகப்பட்டுள்ளோம். அதோடு, இந்த மீன் சந்தைக்குப் பயந்து, புதிதாக தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள்  பயப்படுகிறார்கள்.

இதனால், பயந்துகொண்டு அடிக்கடி நாங்களும் விடுமுறை எடுக்கவேண்டியுள்ளது. இன்னும் பலர், தங்கள் பிள்ளைகளுக்கு டி.சி வாங்கிக்கொண்டு, வேறு பள்ளிகளில் சேர்க்கின்றனர். வேறு பள்ளிக்குப் போக வழியில்லாத எங்களைப் போன்ற பலர், அந்த மீன் சந்தையால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதேபோல, இந்த மீன் சந்தைக்கு அருகிலேயே உள்ள சிறு குழந்தைகளுக்கும் இந்த மீன் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு, காலை முதல் மாலை வரை அந்த குழந்தைகள் அவதிப்படுகிறார்கள்.

அதனால், அங்குள்ள அங்கன்வாடிக்குப் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். அதே பகுதியில் சுகாதார மையமும் இருப்பதுதான் கொடுமை. இங்கு, தடுப்பூசி போட வரும் கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படக் கூடும். அதோடு, இந்த மீன் சந்தைக்கு அருகில் 500 குடும்பங்கள் இருக்கின்றன. அதனால், இதுசம்பந்தமாக கரூர் நகராட்சி ஆணையர் அவர்களுக்கு உத்தரவிட்டு,  எங்கள் பள்ளி அருகில் இயங்கிவரும் மீன் சந்தையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.