கைப் பாடையில் பிரேதம்...  அமைச்சர் தொகுதியின் அவலம்!

விபத்தில் இறந்தவரின் சடலத்தைச் சுமந்து செல்ல அமரர் ஊர்தி வசதி இல்லாததால், 6 கி.மீ தூரத்துக்கு கைப் பாடை கட்டி, சடலத்தைச் சுமந்துசென்ற அவலம் நேர்ந்திருக்கிறது.  

நாகை மாவட்டம், வேதாரண்யம், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் தொகுதியாகும். இங்கு, தாலுக்கா தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. வேதாரண்யம் அருகில் உள்ள மணியன்தீவு கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர், 19-ம் தேதி வேன் மோதிய விபத்தில் மருத்துவ சிகிச்சையிலிருந்து நேற்று இறந்துபோனார். அவரது உடலை ஊருக்குக் கொண்டுசெல்ல வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லை. நாகப்பட்டினத்திலிருந்து அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு, அதன்பிறகுதான் கொண்டுசெல்ல வேண்டும் என்றதால், அதற்காகப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். அங்கிருந்து அமரர் ஊர்தி வரும், வராது என்ற உத்தரவாதமும் இல்லை. எனவே, கைப் பாடை ஒன்றைக் கட்டி, அதில் நடராஜன் உடலை ஏற்றி, தோளில் சுமந்தவாறே 6 கி.மீ தொலைவிலுள்ள மணியன்தீவு கிராமத்துக்குக் கொண்டுசென்றார்கள். ''இந்த ஆட்சியில், வாழும்போதுதான் நல்லது செய்துதர முடியவில்லை.  இறந்த பிறகாவது அடக்கம்செய்யத் தேவையான உதவிகளை இந்த அரசு செய்து கொடுத்தால் என்ன? இத்தனைக்கும் அமைச்சர் ஓ.எஸ். மணியனினின் சொந்தத் தொகுதி இது. இறந்தவர் உடலைச் சுமந்துசெல்ல ஒரு அமரர் ஊர்தியை அமைச்சரால் செய்துதர முடியாதா? ஏழைகளின் அவதி எப்போதும் ஆள்பவர்களுக்குத் தெரிவதில்லை'' என்று குமுறினார் கிராமவாசி ஒருவர்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!