வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (21/11/2017)

கடைசி தொடர்பு:08:16 (21/11/2017)

இந்தியக் கடலோரக் காவல்படையினர் தமிழ் மொழியின் மகத்துவம் தெரியாதவர்கள் - அன்வர்ராஜா பேச்சு.

'மீனவர்கள்மீது துப்பாக்கியால் சுட்டவர்களுக்கு, தமிழ் மொழியின் மகத்துவம் தெரியவில்லை' என ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, அரசு விழாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

தமிழன் என அடையாள படுத்திக்கொள்ள தமிழ் மொழி தேவை. அன்வர்ராஜா பேச்சு 

ராமநாதபுரத்தில் 64-வது கூட்டுறவு வார விழா, மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்தது. அமைச்சர் மணிகண்டன் பங்கேற்ற இந்த விழாவில், வாழ்த்துரை வழங்கிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, ''தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டு, இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போது இந்தியக் கடலோரக் காவல்படை, பிச்சை, ஜான்சன் என்ற இரண்டு மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதை, இந்தியக் கடலோரக்  காவல்படையினரும் ஒப்புக்கொண்டதால், மண்டபம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக இந்தியில் பேசுமாறு மீனவர்களிடம் கூறியுள்ளனர். பேசவில்லை என்றால் சுடுவேன் எனச் சொல்லியே சுட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர்களுக்கு தமிழ் மொழியின் மகத்துவம் தெரியவில்லை. நமது மொழி சாதாரண மொழியல்ல. பாரதிக்கு பல மொழிகள் தெரிந்திருந்தபோதிலும், 'தமிழ் மொழி போல இனிதானது வேறு எங்கும் காணோம்' என்றார். ஒருவனைத் 'தமிழன்' என்று அடையாளப் படுத்திக்கொள்ளவே தமிழ் மொழி அவசியமாகிறது. 'ஒரு மொழியை அழித்துவிட்டால், அந்த இனத்தையே அழித்துவிடலாம்' என்று இங்கர்சால் என்ற எழுத்தாளர் கூறியிருக்கிறார். தமிழர்களை முற்றிலுமாக அழிக்கவே  இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஓர் உதாரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது'' என்று பேசினார்.

மீனவர்கள்மீது  இந்தியக் கடலோரக் காவல்படை தாக்குதல் நடத்தவில்லை எனவும், அதற்கான குண்டு தங்களிடம் இல்லை எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் வழி மொழிந்து, கருத்து கூறியிருந்தார். இந்நிலையில், அரசு விழாவில் இந்தியக் கடலோரக் காவல்படைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர்ராஜா பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியது.