அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் இளைஞர் மரணம்!

திருப்பூர் அருகே, அளவுக்கு அதிகமான தலைவலி மாத்திரைகளைச் சாப்பிட்ட இளைஞர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்,  நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள பகுதி, கஸ்தூரிபாளையம். இங்குள்ள அண்ணன்மார் நகர் பகுதியில் வசித்துவந்தவர், கோபால். இவர், கடந்த 2 ஆண்டுகளாக கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தும், முறையான மருத்துவம் பார்க்காமல் இருந்திருக்கிறார். பின்னர், தொடர்ந்து தலைவலி அதிகரித்துக்கொண்டே வர, சமீபத்தில் மருத்துவரிடம்  சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். 

 பரிசோதித்த மருத்துவர், அவரின் தலைவலி பிரச்னைக்கு, உரிய மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கி அனுப்பியிருக்கிறார்.

இந்நிலையில், நேற்றைய தினம் வீட்டில் இருந்த கோபாலுக்கு மீண்டும் கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, மருத்துவரிடம் வாங்கி வந்த மாத்திரைகளில் ஒன்றைப் போட்டுள்ளார். இருப்பினும் தலைவலி குறையாமல் தொடர்ந்து அதிக வலியை ஏற்படுத்தவே, பொறுமையிழந்த கோபால், ஒரே வேளையில் அதிக அளவு தலைவலி மாத்திரைகளை  எடுத்து விழுங்கியிருக்கிறார். அதைத்தொடர்ந்து, கோபாலின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பின்னர், உறவினர்கள் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே கோபால் மரணமடைந்தார். இதுதொடர்பாக ஊத்துக்குளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!