வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (21/11/2017)

கடைசி தொடர்பு:07:28 (21/11/2017)

`தாமிரபரணியைக் கூறுபோட்டது வரை போதும்!' – உண்ணாவிரதப் போராட்டத்தில் திருமுருகன் காந்தி!

’’தாமிரபரணி ஆற்றைக் கூறுபோட்டு மணலை அள்ளிச்சென்றது வரை போதும்’’ என தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மே-17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார்.

thirumurugan gandhi participated in srivaikundam fasting protest

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் நடந்துவரும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக்கோரியும், தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்குவதை நிறுத்தக்கோரியும், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், மே-17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் நாகை திருவள்ளுவன், பல்வேறு அமைப்பினர் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி, “நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் தந்பொருநை நதியாம் தாமிரபரணிக் கரையோரங்களிலும், ஆற்றுக்குள்ளும் தூர்வாரும் பெயரில் அளவுக்கு அதிகமாக மணலை ஆங்காங்கே அள்ளி, ஆற்றைக் கூறுபோட்டு, எதற்கும் பயன்படாத பள்ளமாக்கிவிட்டார்கள் மணல் கொள்ளையர்கள். இதனால், தண்ணீர் செல்லும் பாதை தெரியாமல் பல இடங்களில் ஆற்றுப்படுகைகளில் குட்டைகள் உருவாகி, ஆங்காங்கே தேங்கிநிற்கின்றன. இந்நிலையில், மேலும் திருட்டுத்தனமாக மணல் கொள்ளையும் நடந்துவருகிறது.

fasting protest in srivaikundam

மணல் காணப்பட்ட இடங்களிலெல்லாம் சீமைக் கருவேலமரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. மணல் ஏற்றிச் சென்ற லாரிகளைப் பல முறை மக்கள் சிறைபிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த மணல் கொள்ளைக்கு முழுக்காரணமே தமிழக அரசும், அதிகாரிகளும்தான். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் முழு தண்ணீர்த் தேவையையும் தாண்டி விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில், பகுதி அளவில் மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்து வரும் தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிதண்ணீருக்கே தண்ணீர் இல்லாத சூழலில், 20 எம்.ஜி.டி திட்டத்தின்மூலம் பல தொழிற்சாலைகளுக்கு  மட்டும் தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எந்தத் தடையும் இல்லாமல் வழங்கப்பட்டுவருகிறது.

இதுதவிர, தனியார் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள்மூலம் லாரிகளில் தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் எடுத்து விற்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக நிலத்தடி நீர் இயக்கத்தின் சார்பில் பல முறை ஆட்சியரிடம் மனு அளித்தும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தாமிரபரணியைக் கூறுபோட்டது போதும். மணல்கொள்ளை, நிலத்தடிநீர் திருட்டு, தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குதல் ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போராட்டத்தை மாநிலம் முழுவதும் இந்தப் பிரச்னையைக் கொண்டுசெல்ல இருக்கிறோம்.’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க