ஆரம்பிக்கிறார் ஆறுமுகசாமி...வெளிச்சத்திற்கு வருமா ஜெயலலிதா மரணத்தின் கதை?

ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை கமிஷனின் விசாரணை நவம்பர் 22-ம் தேதி துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்டபம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டது முதல் மரணம் அடைந்த தேதிவரை, அனைத்தும் மர்மமாகவே இருந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த நாள்களில் அவரின் எந்தவொரு புகைப்பட ஆதாரங்களையும் மருத்துவமனை தரப்போ, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களோ வெளியிடவில்லை.

சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை மருத்துவனைக்கு பார்க்கச் சென்ற அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் யாரையும் அவரைப் பார்க்க அனுமதிக்காதது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துவந்தாலும், அவரின் உடல்நிலை குறித்த சந்தேகம், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து நீடித்து வந்தது. 'நன்றாக குணமடைந்து விட்டார்' என்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்த சில தினங்களிலேயே ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியால் அ.தி.மு.க.தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதாவின் மரணம் குறித்து ''நீதி விசாரணை வேண்டும்'' என ஓ.பன்னீர்செல்வமும் குரல் கொடுத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைவதற்கு ஏதுவாக, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

ஜெயலலிதா மரணம்

அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். விசாரணை ஆணையத்திற்கான அலுவலகம், சேப்பாக்கம் எழிழகம் வளாகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, செய்திதாள்கள் மூலம் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, நவம்பர் 22-ம் தேதி இந்த விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடங்க உள்ளது. விசாரணை ஆணையத்திற்கான அலுவலகம் முழுவதும் தயாராகி விட்டது. நீதிமன்றப் பாணியில் விசாரணைக்கூண்டு, நீதிபதி நாற்காலி, கணிப்பொறி உள்ளிட்ட அனைத்தும் இந்த அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜெயலலிதா மரணத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்தவர்கள் என பலரும் விசாரணை கமிஷன் முன் வாக்குமூலம் அளிக்க, சம்மன் அனுப்பி அழைக்கப்படலாம் என்று தெரிகிறது. 

ஜெயலலிதா மரணம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தி.மு.க. பிரமுகர் டாக்டர். சரவணனுக்கு விசாரணை கமிஷன் மூலம் முதலாவதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள விசாரணையில் முதல் ஆளாக சரவணன் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும் இந்த விசாரணை ஆணையத்தில் "ஜெயலலிதா மரணம் குறித்து  தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்பு உடையவர்களும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை சத்தியப் பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவத்தில் (1 பிளஸ் 2 நகல்களுடன்) தகுந்த ஆவணங்கள் இருப்பின், 'மாண்புமிகு நீதியரசர் திரு அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முதல்தளம், கலச மகால் புராதன கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை-600005. (Email ID: justicearumughaswamycoi@gmail.com) என்ற முகவரியில் அமைந்துள்ள ஆணையத்திடம் 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம்'' என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, எழுபது நபர்கள் விசாரணை ஆணையத்தின் மெயிலுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்கள். ஏழுபேர் நேரடியாகவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்கள். இவர்களிடமும் அடுத்தடுத்த கட்டங்களில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. 

'ஜெயலலிதா மரணம் அடைந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இப்போது அவர் மரணம் குறித்து தொடங்கவுள்ள விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, உண்மையை வெளிக் கொண்டுவருமா?' என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு,க தொண்டர்களிடம் மட்டுமல்லாது, தமிழக மக்களிடையேயும் எழுந்துள்ளது....!. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!