ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே கருத்து வேறுபாடு! உறுதிப்படுத்தும் மைத்ரேயன்

அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை என்கிறரீதியில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க அணிகளாகச் சிதறியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்துவருகின்றனர்.

அணிகள் இணைந்தாலும், இருதரப்பினரிடையே புகைச்சல் இருந்துவருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய முன்னாள் அமைச்சரும் பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தவருமான கே.பி.முனுசாமி, ’அ.தி.மு.க-வில் இருப்பது அண்ணன் - தம்பி இடையிலான பிரச்னைதான்; அது,விரைவில் பேசித் தீர்க்கப்படும்’ என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால், இருவர் இடையேயும் மனக்கசப்பு இருப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ எந்தவித கருத்தும் கூறாமல் இருந்துவந்தனர். 

இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன், அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், ‘ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. 'மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று பதிவிட்டுள்ளார். மழை பாதிப்புகளைப் பார்வையிட வரும்போது, அதுகுறித்து அமைச்சர்கள் தகவல் தெரிவிப்பதில்லை என்றும் அவர் கருத்து கூறியிருந்தார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!