வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (21/11/2017)

கடைசி தொடர்பு:11:03 (21/11/2017)

விஷன் 2023... ஸ்டாலின் மனைவிக்கு அட்வைஸ்! - கோவையில் பொங்கிய செல்லூர் ராஜூ

'தமிழக அமைச்சர்களைக் கேவலமாகப் பேசுவதை எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று கோவையில் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் மனைவிக்கு அட்வைஸ் கொடுத்து அதிரவைத்தார்.

கோவையில், மாநில அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஊரக வளர்ச்சி்த்துறை அமைச்சர் வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படுகாஸ் நடனத்தோடு ஆரம்பித்தது விழா.

முதலில் மைக் பிடித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அம்மாவின் ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக நடத்திவருகின்றனர். எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு புள்ளிவிவரங்களுடன் அண்ணன், அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துவருகிறார். பள்ளிகளில் முட்டை போடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது  அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சியினர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது'' என்றார். 

அடுத்ததாக, மாநில அளவில் சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவு வங்கியாக மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி சென்னைக்கு முதல் பரிசும், இரண்டாவதாக கோவை மத்திய கூட்டுறவு வங்கிக்கும், மூன்றாவதாக விழுப்புரம் மாவட்ட மத்திய வங்கிக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக மைக் பிடித்த  அமைச்சர் செல்லூர் ராஜு, கூட்டுறவுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார். "இது அம்மா எனக்கு வழங்கிய பொறுப்பு. 'மக்களில் ஒருவனாக இருந்து மக்களுக்கு பணியாற்றுங்கள். இல்லையென்றால், மக்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள்' என்று அம்மா எங்களிடம் அடிக்கடி சொல்வார். 'அம்மா எனக்கு கொடுத்துச்சென்ற பொறுப்பை விவசாயக் குடும்பத்தின் பிரதிநிதியான நான் முறையாகச் செய்துவருகிறேன்.

தமிழகத்தில் ஒரே துறையில் ஏழு ஆண்டுகள் வரை பணியாற்றிய ஒரே அமைச்சர் நான்தான். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடுதான் கூட்டுறவு வங்கிகளில் முதலிடத்தில் இருக்கிறது. பல வசதிகள் கூட்டுறவு வங்கிகளில் செய்துள்ளோம். ஏ.டி.எம் கார்டுகளெல்லாம்கூட தருகிறோம். அதேபோல, பாதுகாப்பிலும் கூட்டுறவு வங்கிதான் டாப். கனரா பேங்க், இந்தியன் பேங்க் போன்ற பல பேங்குகளில் எல்லாம் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் இதுவரை ஒரு கொள்ளைச் சம்பவம்கூட நடந்தது இல்லை. அந்த அளவுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியிஇருக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், எங்களை என்னென்னவோ சொல்லி விமர்சிக்கிறார். குதிரைபேர அரசு என்கிறார். ஊழல் ஆட்சி என்கிறார்.  யார்… நாங்களா குதிரைபேர அரசு? இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, தி.மு.க மட்டும்தான். இந்தியாவுக்கே ஊழலை அறிமுகப்படுத்தியது கருணாநிதிதான். அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது எங்கள்மீது குற்றம் சொல்கிறார்கள்.

நாங்கள் குடிமராமத்துப் பணியை ஆரம்பித்து, தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளைத் தூர் வாரி உள்ளோம். ஆனால், ஸ்டாலின் ஒரே ஒரு குளத்தைத் தூர் வாரிவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு குளத்தைத் தூர் வாரினால், எல்லா குளங்களிலும் நீர்மட்டம் ஏறிவிடுமா என்ன?  நான் ஸ்டாலின் மனைவிக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 'அவரை  கொஞ்சம் பத்திரமாகப் பார்த்துக்கோங்கம்மா. பாவம், பதவி பித்துப் பிடிச்சுக் கெடக்குறார்' எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றவர், எங்களை தரக் குறைவாகப் பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஆட்சியில் தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள்;  திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். 2023 விஷன் திட்டம் எங்களிடம் இருக்கிறது. அடுத்த முறையும் அ.தி.மு.க ஆட்சி கண்டிப்பாக அமையும்'' என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க