வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (21/11/2017)

கடைசி தொடர்பு:12:58 (21/11/2017)

 கூட்டுறவு சங்கங்களில் மக்களாட்சித் தத்துவம் மலரச்  செய்தவர்  ஜெ. ! - வெல்லமண்டி நடராஜன்

கூட்டுறவு சங்கங்களில் மக்களாட்சித் தத்துவம் மலரச்  செய்தவர்  ஜெயலலிதா  என்றுக் கூறியுள்ளார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

    வெல்லமண்டி நடராஜன்

திருச்சி, தேவர் மன்றத்தில் நேற்று மாலை 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மணப்பாறை ஆர்.சந்திரசேகர், முசிறி எம்.செல்வராஜ், மண்ணச்சநல்லூர் எம்.பரமேஷ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சகிதமாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்  மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி   ஆகியோர்  கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 119 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 5 இலட்சத்து 34 ஆயிரத்து 400 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.   

நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், “கூட்டுறவு சங்கங்களில் மக்களாட்சித் தத்துவம் மலர ஏதுவாக, முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் மாநில கூட்டுறவுத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு, 471 கூட்டுறவுச் சங்கங்களுக்கும் 5 மத்திய கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழக அரசு விவசாயக் கடன் தள்ளுபடி 2016 திட்டத்தின்கீழ், 63876 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூபாய் 279 கோடியே 87 லட்சம் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, விவசாயிகள் நலனை கருத்தில்கொண்டு, வட்டியில்லாத பயிர்க்கடனை வழங்கிவருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு இதுவரை 8756 விவசாயிகளுக்கு ரூபாய் 65 கோடியே 77 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் மற்றும் தாய்மார்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஆடு, மாடு மற்றும் விவசாயக் கருவிகள் வாங்கிடவும், பால் பண்ணை அமைத்திடவும் மத்திய கால கடன்கள் வழங்கப்படுகிறது.  இதுவரை  திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 2659 விவசாயிகளுக்கு மத்திய கால கடனாக, ரூபாய் 13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

          வெல்லமண்டி நடராஜன்

  கூட்டுறவு என்பது எல்லோரும் ஒருவருக்காக, ஒருவர் எல்லோருக்குமாக என்ற உன்னத அடிப்படையில், அரசு அந்தக் கோட்பாட்டை உணர்ந்து ஏழை எளிய நடுத்தர சமுதாயத்தின் அடித்தள மக்களின்   வாழ்க்கை உயர்வதற்கு, இந்த அமைப்பு முறையை வலுப்படுத்திக்கொண்டுவருவது எல்லோரும் அறிந்த உண்மையாகும். எல்லோரையும் சரிசமமாக்குவதில், கூட்டுறவை கருவியாக எடுத்து, இந்த அரசு செயல்படுகிறது. அதற்கு, எல்லோரும் தலைவணங்கி உருதுணையாக இருப்போம்” என்றார். 

அடுத்து பேசிய அமைச்சர் எஸ்.வளர்மதி, “திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள்மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மகளிர் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.

நடப்பாண்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூபாய் 83 லட்சம் கடன் தொகை, திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க ரூபாய் 1.61 கோடிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது”  என்றார்.

 விழாவுக்குத் தலைமை வகித்த  மாவட்ட கலெக்டர் ராசாமணி,  தமிழக அரசின் முதன்மைத் திட்டமான பொது விநியோகத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1197 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 884 கடைகள் முழு நேரமாகவும், 313  கடைகள் பகுதி நேரமாகவும், பச்சமலையில் உள்ள சின்னபழமலை மற்றும் பெரியபழமலை ஆகிய மலை கிராமங்களுக்கு ஒன்றும், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் ஒன்றுமாக,  இரண்டு நகரும்நியாயவிலைக் கடைகள் செயல்பட்டுவருகின்றன.

மாநில அளவில் பொது விநியோகத் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மாநிலத்திலேயே பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு இயந்திரப் பயன்பாடு சிறப்பாகச் செயல்படுத்திய காரணத்தால், திருச்சி மாவட்டத்திற்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளரால் இரண்டு முறை பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின்மூலம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 811 மின்னணுக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 99 சதவிகித அளவிற்கு வழங்கப்பட்டுவிட்டது” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க