குடியரசு தின தேதியை மறந்த மு.க.ஸ்டாலின்! கலகலத்த பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், குடியரசு தின தேதியை மாற்றிச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவிசெய்ய நினைத்த கட்சி நிர்வாகியால், ஸ்டாலினின் குழப்பம் அதிகரித்தது. 

ஸ்டாலின் நிகழ்ச்சி

நெல்லை மாவட்டத்தில் நடந்த பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று கலந்துகொண்டார். சங்கரன்கோவிலில் தங்கவேலு மகன் திருமண விழாவை நடத்திவைத்த அவர், சுரண்டையில் கட்டப்பட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைத்தார். பின்னர், பாவூர்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாபன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், காளிதாஸ் என்பவர் தலைமையில் தி.மு.க-வில் இணைந்தனர். 

பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக அரசை கடுமையாகச் சாடினார். பின்னர், கலைஞர் ஆட்சியின்போது மாநிலங்களுக்கான உரிமைகளை வாதாடிப் பெற்றார் என்பதை விளக்கும் வகையில், இந்திரா பிரதமராக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்களை விளக்கினார். அப்போது, ’முன்பெல்லாம் ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்திலும், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்திலும் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தனர். இது தொடர்பாக கலைஞர் வாதாடிப் பேசியதால், ஆகஸ்ட் 15-ம் தேதி மாநில முதல்வர்களும் ஜனவரி 25-ம் தேதி குடியரசு தினத்தில் ஆளுநரும் கொடியேற்றுவது நடைமுறைக்கு வந்தது’ என்று பேசினார்.

பொதுக்கூட்டம்

ஜனவரி 26-ம் தேதிக்குப் பதிலாக 25-ம் தேதி என்று ஸ்டாலின் தவறுதலாகக் குறிப்பிட்டார். அதனால், பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேடையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு எழுந்து ஸ்டாலின் அருகே வந்து தவறை சுட்டிக்காட்டினார். அவர் கூறியது தெளிவாக இல்லாததால், ஸ்டாலின் மீண்டும், ’டிசம்பர் 25, இல்ல... இல்ல ஜனவரி 25 குடியரசு தினம்’ என மாறி மாறிப் பேசினார். சிறிது நேரத்தில் தனது தவறை உணர்ந்த அவர், மீண்டும் தெளிவாகப் பேசி முடித்தார். இந்த விவகாரம் கூட்டத்தில் இருந்தவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!